
டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
பயிர்கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணத்தை அதிகரிக்க வேண்டும், விளை பொருட்களுக்கான காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் கடந்த 17 நாட்களாக தமிழக விவசாயிகள் போராடி வருகின்றனர்.
ஆரம்பத்தில் மனித மண்டை ஓடுகளை வைத்து முழங்கிய விவசாயிகள் , தற்போது தங்களது போராட்டத்தை ஒட்டுமொத்த இந்திய தேசமே வியக்கும் அளவுக்கு முன்னெடுத்துச் சென்று வருகின்றனர். போராடுவது தமிழக விவசாயிகள் தானே என்றில்லாமல் மஹாராஷ்டிரா மாநில விவசாயிகளும் தமிழர்களுக்கு ஆதரவாக ஜந்தர் மந்தரில் கைகோர்த்துள்ளனர்.
Skull Protest என்று வடஇந்திய ஊடகங்கள் முழங்கும் அளவுக்கு தமிழக விவசாயிகளின் போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேண்டிய மத்திய அரசோ, உரிய பதிலளிக்காமல் கள்ளமெளனம் சாதித்து வருகிறது.
விவசாயிகளின் வேதனையை மாநிலங்களவையில் தமிழக எம்.பி.க்கள் எடுத்துக் கூறியதும், உடனே எழுந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரச்சனை இருக்கிறது சரிசெய்கிறோம் என்று மட்டும் கூறி அமர்ந்துவிட்டார்.
இந்தச் சூழலில் டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் போராடி வரும் விவசாயிகளை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி இன்று நேரில் சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம்
அவர் பேசுகையில், "பணக்காரர்களின் கடன்களை மட்டுமே மோடி தள்ளுபடி செய்கிறார். ஆனால் நாட்டை கட்டமைக்கும் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய சுணக்கம் காட்டி வருகிறார். தமிழக மக்களையும் தமிழக விவசாயிகளையும் மோடி அவமதிப்பதை ஏற்க முடியாது" இவ்வாறு தனது பேட்டியில் ராகுல்காந்தி கூறினார்.