
அவசியம் ஏற்பட்டால் அரசியலில் குதிப்பேன்…ராகவா லாரன்ஸ் அதிரடி…
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தி மாணவர்கள் , இளைஞர்கள் பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் சென்னை மெரினாவில் வரலாறு காணாத அளவுக்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் மாணவர்களுக்கு ஆதரவாக நடிகர் ராகவா லாரன்ஸ் தொடர்ச்சியாக கலந்து கொண்டு முக்கிய பங்கு வகித்தார்.இறுதி நாளில் வன்முறை நடைபெறுவதற்கு முன்பாக மெரினாவில் மாணவர்களுடன் சமாதான முயற்சியிலும் ஈடுபட்டார்.
இந்த போராட்டத்துக்குப் பிறகு மாணவர்கள் சிலருடன் ஓபிஎஸ்சை சந்தித்த ராகவா லாரன்ஸ், சிறையில் உள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்களை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் மெரினா போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரு பிரிவு மாணவர்களுடன் நடிகர் ராகவா லாரன்ஸ் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது கடந்த சில நாட்களாக நான் அரசியலுக்கு வருவது போன்ற செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் தற்போது அரசியலுக்கு வர வேண்டும் என எண்ணம் எனக்கு ஏதுமில்லை. மாணவர்களுடன் கலந்து ஆலோசித்து கல்வி மற்றும் மருத்துவம் சார்ந்து சில உதவிகளை மட்டும் செய்வது என்று முடிவு செய்துள்ளேன் என தெரிவித்தார்.
அதற்காக மாணவர்களுடன் இணைந்து ஒரு அமைப்பை உருவாக்க உள்ளாதாக லாரன்ஸ் தெரிவித்தார்.அமைப்பின் பெயர் உட்பட அனைத்து மாணவர்களின் முடிவு தான் என்றும் ,இந்த அமைப்பில் எந்த கட்சியை சார்ந்தவர்களும் இருக்க மாட்டார்கள் என்றும் லாரன்ஸ் கூறினார்.
தற்போதைக்கு அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் இல்லை என்றாலும் தேவை ஏற்பட்டால் மாணவர்களுடன் இணைந்து அரசியலில் குதிப்பேன் என்றும் ராகவா லாரன்ஸ் தெரிவித்தார்.