வால்பாறை மற்றும் பொள்ளாச்சி பகுதி மக்களை அச்சுறுத்தும் சுள்ளி கொம்பன் காட்டு யானையால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த யானையின் செயல்பாடுகள் கணிக்க முடியாததால், மக்கள் வெளியே செல்வதற்கும், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கும் பயப்படுகிறார்கள்.
ஊருக்குள் வரும் யானை
மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக நாளுக்கு நாள் காடுகளின் பரப்பளவு குறைந்து மரங்கள் அழித்து வீடுகள், சொகுசு விடுதிகள் அதிகரித்து வருகிறது. இதனால் உணவை தேடி மக்கள் வாழும் பகுதிக்குள் காட்டு விலங்குகள் அடிக்கடி வரும் நிகழ்வுகள் தொடர்கிறது. அந்த வகையில் மக்களை அச்சுறுத்தும் காட்டு யானைகள் பிடிக்கப்பட்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவதும், முதுமலை யானைகள் சரணாலயத்தில் அடைக்கப்படும் நிகழ்வும் தொடர்கிறது.
இந்த நிலையில் தான் வால்பாறை மற்றும் பொள்ளாச்சி பகுதி மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது சுள்ளி கொம்பன் ஒற்றை காட்டு யானை. கேரளம், நெல்லியம்பதியை பூர்விகமாக கொண்ட சுள்ளி கொம்பன் என்கின்ற ஒற்றை காட்டு யானை கடந்த 5 ஆண்டுகளாக நவமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
பொள்ளாச்சியை அச்சுறுத்தும் சுள்ளியானை
ஆரம்பத்தில் அமைதியாக உணவைத் தேடி வந்து கொண்டிருந்த இந்த காட்டு யானை கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் மூர்க்கத்தனமாக செயல்பட தொடங்கி இருக்கிறது. மதம் பிடித்து செயல்படுகிறதா என்ற அச்சமும் அப்பகுதி மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. நவமலை என்கின்ற ஊரில் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையம் மற்றும் துணை மின் நிலையம் உள்ளன. அங்கு பணிபுரியும் ஊழியர்களின் குடும்பங்களும் அங்கு வசித்து வருகின்றனர். இதனையடுத்து யானைக்கு உரிய சிகிச்சை அளித்த அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
அடர்ந்த காட்டுக்குள் விட கோரிக்கை
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த காட்டு யானையின் செயல்பாடுகள் கணிக்க முடியாத வகையில் உள்ளதால் ஒரு நேரம் சாதுவாகவும் சில நேரம் மூர்க்க தனமாகவும் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு இருக்கும் சூழ்நிலையில் அப்பகுதியில் உள்ள மக்கள் வெளியே சென்று வருவதற்கும், பேருந்துகளில் தங்கள் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்புவதற்கும் அச்சப்படுகிறார்கள்.
வனத்துறையினர் தற்போது பாதுகாப்பிற்காக பள்ளி பேருந்துடன் தங்களது வாகனத்தில் சென்று வந்தாலும் யானையின் மூர்க்க தனத்தால் அசம்பாவிதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே தமிழக அரசு இதற்கு தகுந்த நடவடிக்கை எடுத்து அந்த ஒற்றை காட்டு யானைக்கு தேவையான சிகிச்சையை அளித்து அடர்ந்த காட்டுப் பகுதிகளுக்குள் கொண்டு விட தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஈஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.