
முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் முதற்கட்டமாக 1,545 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புறப் பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் விரிவுபடுத்தப்பட்டது.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கத்தினை முதல்வர் ஸ்டாலின், நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தொடங்கி வைத்தார். இதன் மூலம், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புறப் பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள 31,008 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 15.75 லட்சம் மாணவ, மாணவியர் பயன்பெற்று வருகின்றனர்.
நாடு முழுமைக்கும் முன்னோடியாக உள்ள முதலமைச்சரின் காலை உணவு திட்டத்துக்கு பள்ளி செல்லும் குழந்தைகளிடமும், அவர்களது பெற்றோரிடமும் மிகுந்த வரவேற்பு உள்ளது. காலை உணவுத் திட்டத்தில், உப்புமா, கிச்சடி, பொங்கல் உள்ளிட்டவைகளில் சிறுதானிய உணவுகள் சேர்த்து வழங்கப்படுகிறது. அதாவது, ரவா, சேமியா, சிறுதானியம், பருப்பு, காய்கறி ஆகியவை அடங்கிய உணவுகள் வழங்கப்படுகின்றன.
இதனிடையே, இந்த திட்டத்தை விமர்சித்து நாளிதழ் ஒன்று தலைப்பு செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு, நிரம்பி வழியும் கக்கூஸ் என்ற தலைப்பில் முதல்பக்க பேனர் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், காலை உணவுத் திட்டத்தை கொச்சைப்படுத்திய நாளிதழுக்கு எதிராக தமிழ்நாட்டில் ஆங்காங்கே போராட்டம் நடைபெற்று வருகிறது. ஏழை எளிய மாணவர்களின் காலை உணவு திட்டத்தை கொச்சைப்படுத்திய செய்தி நாளிதழை எரித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திராவிடர் கழகம், இடதுசாரிகள் அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
சென்னையின் அதன் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட மே 17 இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. பத்திரிக்கை எரிப்பு போராட்டம் நடத்த DYFI அழைப்பு விடுத்துள்ளது. சென்னையின் பல இடங்களில் அந்த நாளிதழ் சார்பாக வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகள் போஸ்டர்கள் கிழித்து எறியப்பட்டு வருகின்றன. டிஜிட்டல் பேனர்கள் உள்ளிட்டவையும் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.
செப். 17 இல்ல, செப். 18 தான் அரசு விடுமுறை; அரசாணை வெளியீடு
முன்னதாக, நாளிதழின் செய்திக்கு கண்டனம் தெரிவித்திருந்த முதல்வர் ஸ்டாலின், “உழைக்க ஓர் இனம் - உண்டு கொழுக்க ஓர் இனம் என மனுவாதிகள் கோலோச்சிய காலத்தில் 'எல்லார்க்கும் எல்லாம்' எனச் சமூகநீதி காக்க உருவானதுதான் திராவிடப் பேரியக்கம். 'சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுத்து விடாதே' என்பதை நொறுக்கி, கல்விப்புரட்சியை உருவாக்கிய ஆட்சி திராவிட இயக்க ஆட்சி. நிலவுக்குச் சந்திரயான் விடும் இந்தக் காலத்திலேயே சனாதனம் இப்படியொரு தலைப்புச் செய்தியைப் போடுமானால், நூறு ஆண்டுகளுக்கு முன் என்ன ஆட்டம் ஆடியிருக்கும்? எளியோர் நிலை எப்படி இருந்திருக்கும்? இன்னமும் அந்த வன்மம் மறையவேயில்லை!” என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
/p>
“கல்வி நிரம்பி வழிகிறதா என்று பார்க்கிறது திராவிட மாடல். ஆனால், கழிவறை நிரம்பி வழிகிறதா என்று பார்க்கிறது ஆரிய மாடல்.” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.