
அடங்காநல்லூராகிப்போன அலங்காநல்லூர்… வெயில், குளிருக்கு அஞ்சாத இளைஞர்கள்…
ஜல்லிக்கட்டுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. பீட்டா அமைப்பு இதற்கு பின் புலமாக இருந்து இயங்கி வருகிறது.
ஆனால் இந்த ஆண்டு எப்படியாவது நமது பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்தியே தீர வேண்டும் என மத்திய, மாநில அரசுக்கு எதிராகவும், நீதிமன்ற ஆணைக்கு எதிராகவும் பல கட்ட போராட்டங்களை உலகம் முழுவதும் தமிழர்கள் நடத்தி வருகின்றனர்.
கடந்த 16 ஆம் தேதி அலங்காநல்லூரில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் இளைஞர்கள் தலைமையில் ஜல்லிக்கட்டு போராட்டம் தொடங்கியது.
போராட்டத்தில் பங்கெற்ற இளைஞர்களுக்கு ஊர் பொதுமக்கள் எந்தவிதமான உதவியும் செய்யக்கூடாது என போலீசார் மிரட்டினர்.மேலும் போராடும் இளைஞர்களிடம் கலைந்து செல்லுங்கள் என எச்சரித்தனர்.
ஆனால் நேரம் ஆக ஆக பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் போராட்டத்தில் இனைந்தனர். வெயில் குளிர் என எதையும் பொருட்படுத்தாத அவர்கள் போராட்டம் வீரியமடைந்தது.
அன்று இரவு முழுவதும் அவர்கள் போராட்டம் ஓயவில்லை.விடிய விடிய போராட்டம் நடத்திய அந்த இளைஞர்களையும், பெண்களையும் அதிகாலையில் போலீசார் குண்டு கட்டாக துக்கிச் சென்று கைது செய்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த அலங்காநல்லூர் பெண்கள் உடனடியாக அதே இடத்தில் போராட்டத்தில் குதித்தனர்.
இதோ இன்று மூன்றாவது நாளாக அங்கு எழுச்சியுடன் அறப்போராட்டம் தொடர்ந்து வருகிறது. ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் வரை போராட்டக் களத்தில் இருந்து வெளியேறப்போவதில்லை என அவர்கள் உறுதியுடன் உள்ளனர். வாடிக் கிடக்கும் அந்த வாடிவாசலை திறக்காமல் விடப்போவதில்லை என சபதம் ஏற்றுள்ளனர்.
அந்த போராட்டக் களத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து வருகிறது.தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அங்கு குவிந்த வண்ணம் உள்ளனர். இவர்களுக்கு உணவு , குடிநீர் போன்றவற்றை உள்ளூர் மக்கள் வழங்கி வருகின்றனர்.
தங்களுக்காக போராடும் இந்த இளைஞர்களுக்கு என்ன வேண்டுமானாலும் செய்ய காத்திருக்கிறோம் எனஅலங்காநல்லூர் மக்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
எத்தனை அடக்குமுறைகள் வந்தாலும் அடங்காமல் ஜல்லிக்கட்டு நடத்தியே தீருவோம் என முழக்கமிடுகின்றனர் அலங்காநல்லூர் மக்கள்.
.