ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு - திருப்பூர் மாவட்டம் முழுவதும் போராடிய 648 பேர் கைது...

First Published Mar 21, 2018, 10:10 AM IST
Highlights
protest against Rama Raja Ratha Yatra - 648 people arrested in Tirupur district


திருப்பூர்

ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் மாவட்டம் முழுவதும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு கட்சியை சேர்ந்த 648 பேர் கைது செய்தனர்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி ராம ராஜ்ய ரத யாத்திரை நேற்று கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைப்பெற்றது.

அதேபோன்று தலைமைச் செயலகம் முன்பு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட முக்கிய தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர். 

இதனைத் தொடர்ந்து திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருப்பூரில் பெரியார், அண்ணா சிலை முன்பு சாலை மறியல் போராட்டம் நேற்று மதியம் 1 மணிக்கு நடந்தது.

இந்த போராட்டத்துக்கு வடக்கு மாவட்ட தலைவர் க.செல்வராஜ் தலைமை வகித்தார். தொ.மு.ச. மாநில துணை செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், மாநகர அவைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, இளைஞரணி அமைப்பாளர்கள் தங்கராஜ், செந்தில்குமார், பகுதி செயலாளர் ராமதாஸ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். 

இந்த மறியலில் ஈடுபட்ட 48 பேரை திருப்பூர் வடக்கு காவலாளர்கள் கைது செய்து வேனில் ஏற்றி திருப்பூர் நடராஜா திரையரங்கம் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்து பின்னர் மாலையில் விடுவித்தனர்.

இதுபோல ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய மனித நேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, த.மு.மு.க., எஸ்.டி.பி.ஐ. கட்சி, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். 

அதன்படி, திருப்பூரில் 18 இடங்களில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் மொத்தம் 600 பேர் கைது செய்யப்பட்டனர். மாலையில் அவர்கள் அனைவரையும் விடுதலை செய்யப்பட்டனர்.

click me!