அன்று வாடிவாசல்.. இன்று நெடுவாசல்.. இயற்கை எரிவாயுக்கு எதிராக இளைஞர் பட்டாளம்

First Published Feb 23, 2017, 10:35 AM IST
Highlights


ஜல்லிகட்டுக்கு ஆதரவாக வாடிவசலை திறக்க திரண்டெழுந்த இளைஞர் பட்டாளம் தமிழக விவசாயத்தை பாதுகாக்க நெடுவாசல் இயற்கை எரிவாயு திட்டத்துக்கு எதிராகவும் திரள உள்ளனர்.

காளைகளை துன்புறுத்துவதாக கூறி பீட்டா விலங்கு நல வாரியம் தொடர்ந்த வழக்குகளால் தமிழகத்தின் பாரம்பரியமிக்க வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டது.மத்திய அரசும் ஜல்லிகட்டுக்கு எதிராக செயல்பட்டது.

தொடர்ந்து 2 ஆண்டுகள் ஜல்லிக்கட்டு நடக்காமல் போனது.

அரசியல்வாதிகளின் அடையாளப்பூர்வமான போராட்டங்களால் எந்த பலனும் கிடைக்கவில்லை.

ஜல்லிக்கட்டு வெறும் சாதாரண விவகாரம் என்றும் அதை நசுக்கி விடலாம் என்றும் பீட்டா போன்ற வெளிநாட்டு ஆதரவு நிறுவனங்கள் நினைத்திருந்த வேளையில் ஜல்லிக்கட்டு என்பது காளைகள் சம்பந்தப்பட்ட விவகாரம் மட்டுமல்ல அதன் பின்னால் தமிழக விவசாயம், பால் உற்பத்தி தொழில் போன்ற வியாபார விஷயங்கள் உள்ளன என்பதை தமிழகத்தின் இளைஞர் பட்டாளம் புரிந்து கொண்டது.

ஐடி துறை உட்பட பல்வேறு துறைகளில் பணியாற்றிய இளைஞர்கள் வெளிநாட்டு நிறுவனங்களின் சூழ்ச்சிகளையும் அதற்கு உதவி செய்யும் பீட்டா விலங்கு நல வாரியம் போன்ற அமைப்புகளையும் அடையாள போராட்டம் மட்டுமே நடத்தும் அரசியல் வாதிகளையும் இனம் கண்டனர்.

இதையடுத்து இளைஞர் பட்டாளம் தன்னெழுச்சியாக போராட்டத்தில் குதித்தனர்.

தமிழகம் மட்டுமல்ல இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த 6 நாட்கள் நடந்த போராட்டத்தின் விளைவாக மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு அவசர சட்டத்தை கொண்டு வந்தனர்.

இதே போன்றதொரு நெருக்கடி மீண்டும் டெல்டா விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

சோழநாடு சோறுடைத்து என்று புகழப்பட்ட தமிழகத்தின் நெற்களஞ்சியம் டெல்டா மாவட்டங்கள் ஏற்கெனவே வறட்சியால் வாடி கிடக்க மற்றொரு பேரிடியாக புதுக்கோட்டை நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு துவக்கவுள்ளது.

மீத்தேன் எரிவாயு திட்டம் பொதுமக்கள் விவசாயிகள் எதிர்ப்பால் கைவிடப்பட மறுவடிவில் நெடுவாசல் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

இதனால் அப்பகுதியில் சுற்றுவட்டாரம் முழுவதும் விவசாய நிலங்கள், பாழ்பட்டு விவசாய பூமிகளே இல்லாத பாலைவனமாகிவிடும்.

இயற்கை எரிவாயு எடுப்பதால் அதற்கு தேவைப்படும் நிலத்தடி நீர், பல நூறு டிஎம்சி தண்ணீர் விரயமாக்கப்படும்.இதனால் அப்பகுதி முழுவதும் நிலத்தடி நீரே இல்லாத நிலை ஏற்படும்.

இதை எதிர்த்து வழக்கம் போல் அரசியல்வாதிகள் அறிக்கை விட்டு வருகின்றனர்.

நேற்று ஐடி ஊழியர்கள் இத்திட்டதிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

இத்திட்டத்திற்கு எதிரான பிரச்சாரம் வலுவாகும் பட்சத்தில் வாடிவாசலுக்கு ஆதரவான எழுச்சி மிகு போராட்டம் போல் நெடுவசளுக்கு ஆதரவாகவும் பெருமளவில் எழுச்சி போராட்டத்தில் இளைஞர்கள் குதிப்பார்கள்.

click me!