
திருவண்ணாமலை
செய்யாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என்று திருவண்ணாமலையில் நடந்த விவசாயிகள் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரில் ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க தாலுகா அளவிலான மாநாடு அண்மையில் நடைபெற்றது.
இந்த மாநாட்டிற்கு திராவிட விவசாயிகள் முன்னேற்றச் சங்க நிறுவனர் தலைவர் முத்தகரம் பழனிச்சாமி தலைமைத் தாங்கினார்.
அண்ணா சிறு, குறு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.சுப்பிரமணி, விவசாயிகள் பிரதிநிதி டி.இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் பன்னீர்செல்வம் வரவேற்றுப் பேசினார்.
கீழ்பென்னாத்தூர் தொகுதி எம்எல்ஏ கு.பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மாநாட்டை தொடக்கி வைத்துப் பேசினார். அண்ணா சிறு, குறு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் விசுவநாதன், மாநில துணைத் தலைவர் சிவசாமி, தமிழக விவசாயிகள் சங்க மாநில செய்தித் தொடர்பாளர் புருஷோத்தமன், அறிஞர் அண்ணா விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ஆர்.சிவக்குமார் ஆகியோர் பேசினர்.
இந்த மாநாட்டில், "செய்யாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி அதன் வழியே ஆலத்தூர், ஊசாம்பாடி, துரிஞ்சாபுரம், மங்கலம், கருமாரப்பட்டி, கனபாபுரம், நாரியமங்கலம் ஏரிகள் வழியாக கீழ்பென்னாத்தூர் கோட்டான் ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர வேண்டும்.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து கரும்பு விவசாயிகளுக்கும் சேர வேண்டிய நிலுவைத் தொகையை தனியார் சர்க்கரை ஆலைகளிடம் இருந்து பெற்றுத் தர தமிழக அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கீழ்பென்னாத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த மாநாட்டில், ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலர் பெரியசாமி உள்பட விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பலர் பங்கேற்றனர்.