மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட பேராசிரியர் - புகார் தெரிவித்த பாரதிதாசன் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்...

First Published Mar 15, 2018, 9:56 AM IST
Highlights
Professor misbehaved to the Students - Bharathidasan College Students Complaint given and protest


பெரம்பலூர்

மாணவிகளிடம், பேராசிரியர் சில்மிஷத்தில் ஈடுபட்டது உள்ளிட்ட பல்வேறு புகார்களை ஆசிரியர்கள் மீது அளித்த பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்கள் அதுகுறித்து நடவடிக்கை என்ன ஆயிற்று என்று உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூரில் உள்ளது பாரதிதாசன் பல்கலைக்கழக  உறுப்புக் கல்லூரி. இக்கல்லூரியின் ஆங்கிலத் துறையில் படித்து வரும் மாணவ - மாணவிகள் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தங்களது துறையில் பணியாற்றும் இரண்டு கௌரவ விரிவுரையாளர்கள், ஒரு பேராசிரியர் ஆகியோர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தனர். 
 
அதில், "மாணவர்களிடையே ஒருதலை பட்சமாக நடந்து கொள்வது, தேர்வில் சீரான முறையில் விடைதாளை மதிப்பீடு செய்யதது" போன்றவை அடங்கும். மேலும், அவர்களில் ஒருவர் மாணவிகளிடத்தில் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

மாணவர்களின் குற்றசாட்டினை கல்லூரி நிர்வாகம் திருச்சி பாரதிதாசன் பல் கலைக்கழக துணை வேந்தர், பதிவாளரிடம் எடுத்து கூறியது. அதன்பேரில் பல்கலைக் கழகத்தில் இருந்து குழு ஒன்று வந்து தொடர்ச்சியாக விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு திடீரென குரும்பலூர் கல்லூரியின் ஆங்கில துறைத் தலைவர் மீனா, பணியிடமாற்றமாக வேப்பூர் அரசு மகளிர் கல்லூரிக்கு மாற்றப்பட்டார். 

இதனை அறிந்த ஆங்கிலத்துறை மாணவ, மாணவிகள் தாங்கள் புகார் தெரிவித்த நபர்கள் மீதான நடவடிக்கை எந்த அளவில் உள்ளது என்று தெரிவிக்காததைக் கண்டித்தும், அவர்களை பணியிடமாற்றம் செய்யக் கோரியும் நேற்று கல்லூரி நுழைவு வாயில் அருகே அமர்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அதனைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் மனோகரன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து தவறு செய்தவர்கள் மீது துறை ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். 

அதனை தொடர்ந்து மாணவர்கள் மேற்கொண்ட போராட்டம் குறித்து பெரம்பலூர் காவலாளர்களும் விசாரணை நடத்தி வருகின்றனர்.  
 

click me!