
சென்னையில் பெய்து வரும் கனமழையால் நகரின் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் தேங்கி வருகிறது. சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சென்னை நகரின் பெரும்பாலான சாலைகள் நீரில் மூழ்கியிருக்கின்றன. எனவே சாலைப் போக்குவரத்து பெருமளவு முடங்கிப் போனது.
இது போல், தாழ்வான பகுதியான சென்னை தாம்பரத்திலும் சாலையில் வெள்ள நீர் பெருக்கெடுத்தது. பிரதான ஜி.எஸ்.டி., சாலையை அடுத்துள்ள தாம்பரம் ரயில் நிலையத்தில், மழை நீர் பெருமளவில் சேர்ந்தது. வெளியேற வழியின்றி, ரயில்வே தண்டவாளங்களில் நீர் சேர்ந்தது. இதனால் தண்டவாளங்கள் நீரில் மூழ்கின. மழை இடைவிடாமல் 4 மணி நேரத்துக்கும் மேல் கொட்டித் தீர்த்ததால் ரயில் பாதைகளில் மழை நீர் மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே வந்தது.
இதனால், ரயில்வே சிக்னல்கள் பாதிக்கப்பட்டன. இதை அடுத்து சென்னை எழும்பூர் - தாம்பரம் இடையேயான ரயில் போக்குவரத்து மெதுவாக இயக்கப்பட்டது. மாலை 7 மணிக்குப் பின்னர் அனைத்து ரயில்களும் மெதுவாக இயக்கப்பட்டதால், தானியங்கி சிக்னல்களில் கோளாறு ஏற்பட்டது. ரயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவரிசை கட்டி நின்றன. இதனால் ரயில்களில் வீடுகளுக்குத் திரும்பும் பயணிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளானார்கள். மழை வேறு அதிகமாகப் பெய்ததால், நடுவழியில் நிறுத்தப் பட்ட ரயில்களில் இருந்து கீழே குதித்து சென்றவர்களும் மழைக்கு ஒதுங்க முடியாமல் திணறினர்.