
தேனி
தேனியில் அரசு செட்டாப் பாக்ஸ் வராததால், இந்த மாதத்திற்குள் டிஜிட்டலுக்கு மாற வேண்டும் என்ற உத்தரவால் தனியார் கேபிள் டிவி உரிமையாளர்கள் தனியார் செட்டாப் பாக்ஸை வாங்கி ரூ.1200-க்கு விற்கின்றனர். சேனல்கள் துண்டித்துவிட்டதாலும், சரியாக தெரியாததாலும் வேறுவழியின்றி மக்கள்ள்ம் அதனை வாங்கிச் செல்கின்றனர்.
மத்திய அரசு டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலமாக, கேபிள் டிவி இணைப்புகளை புதிய தொழில்நுட்பத்திற்கு மாற்றியுள்ளது. அதன்படி சில நாள்களுக்கு முன்னர் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி விலையில்லா டிஜிட்டல் செட்டாப் பாக்ஸை மக்களுக்கு வழங்கி திட்டத்தைத் தொடக்கி வைத்தார்.
தற்போது, தமிழகத்தில் பல்வேறு இடங்கிங்களில் இந்த டிஜிட்டல் தொழில் நுட்பத்திற்கு மக்கள் மாறி வருகின்ற நிலையில், தேனி மாவட்டம், உத்தமபாளையம் பேரூராட்சியில் உத்தமபாளையம் பேரூராட்சியில் இயங்கும் தனியார் கேபிள் டி.வி. உரிமையாளர்கள் ரூ.1200 கொடுத்தால் மட்டுமே செட்டாப் பாக்ஸ் கிடைக்கும் என்றுத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து புகார் தெரிவித்த மக்கள், “செட்டாப் பாக்ஸ் இலவசம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், உள்ளூர் கேபிள் டிவி உரிமையாளர்கள், அரசு தங்களிடம் செட்டாப் பாக்ஸ் வழங்கவில்லை என்றும், இதனால் தனியாரிடம் வாங்கி ரூ.1200-க்கு விற்பதாகத் தெரிவிக்கின்றனர்.
மேலும், கடந்த சில நாள்களாக கேபிள் டிவி சரியாக தெரியாததாலும், சேனல்களை குறைத்துவிட்டதாலும் வேறுவழியின்றி ரூ.1200 கொடுத்து செட்டாப் பாக்ஸ் வாங்கி வருகிறோம்” என்று தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து கேபிள் டிவி உரிமையாளரிடம் விசாரித்தபோது, “அரசு கேபிளாக மாறியதை அடுத்து, இன்னும் ஓரிரு மாதத்திற்குள் புதிய தொழில்நுட்பத்திற்கு மாற வேண்டும். அதன்பின்னர், பழைய தொழில்நுட்ப முறையில் கேபிள் டிவி ஒளிபரப்ப முடியாது.
தற்போது, அரசு தங்களுக்கு செட்டாப் பாக்ஸ் வழங்கவில்லை. இதனால், தனியார் மூலமாக விருப்பமுள்ளவர்களுக்கு ரூ.1200-க்கு செட்டாப் பாக்ஸ் வழங்கப்படுகிறது.
இதன்மூலம், 320 சேனல்களை வழங்குவதாகவும், இதற்கு மாதம் ரூ.170 கட்டணம் வசூலிக்கிறோம். யாரையும் வாங்கச் சொல்லி கட்டாயப்படுத்தவில்லை.
தேனி மாவட்டத்திற்கு அரசு செட்டாப் பாக்ஸ் மொத்தம் 4 மட்டுமே வந்துள்ளது. எனவே, அரசு வழங்கும் செட்டாப் பாக்ஸ் வந்தவுடன் நிர்ணயிக்கப்பட்ட விலையிலேயே மக்களுக்கு வழங்கப்படும்” என்றுத் தெரிவித்தார்.