
சேலம்
கோடை விடுமுறையில் எக்காரணத்தை கொண்டும் தனியார் பள்ளிகளில் மாணவ - மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது. மீறினால் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகௌரி எச்சரித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் தாளாளர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் சேலம் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.
இதற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகௌரி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மதன்குமார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகௌரி பேசியது: "சேலம் மாவட்டத்தில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகள் உரிம சான்றை ஆண்டு தோறும் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாமல் தொடர்ந்து பள்ளிகள் செயல்படுவது தெரியவந்தால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோல் கோடை விடுமுறையில் எக்காரணத்தை கொண்டும் தனியார் பள்ளிகளில் மாணவ - மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது. அதையும் மீறி சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும்.
சுகாதார சான்று, தீத்தடுப்பு சான்று உள்ளிட்டவைகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலகத்தில் விண்ணப்பித்து வைத்திருக்க வேண்டும். ஆசிரியர் கல்வித்தகுதி இல்லாத நபர்களை ஆசிரியர்களாக நியமனம் செய்யக்கூடாது. பி.எட். உள்ளிட்ட ஆசிரியர் கல்வித்தகுதி உள்ள நபர்களை மட்டுமே ஆசிரியர் பணியில் ஈடுபடுத்த வேண்டும்.
பள்ளி வாகனங்களை ஆய்வு செய்து போக்குவரத்துத்துறை அதிகாரிகளிடம் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பள்ளி கல்வித்துறை மூலம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள அரசு விதிமுறைகளை சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் தாளாளர்கள், தலைமை ஆசிரியர்கள் சரியான முறையில் கடைபிடிக்க வேண்டும்" என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.