தனியார் பள்ளிகள் எல்லாம் ஒன்றுமே இல்லை! இந்த அரசுப் பள்ளியில் மக்கள் செய்திருக்கும் மாற்றத்திற்கு முன்னால்...

First Published Aug 10, 2018, 12:32 PM IST
Highlights

தனியார் பள்ளிகள் எல்லாம் ஒன்றுமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு ஸ்மார் கிளாஸ், ஏ.சி.வகுப்பறைகள், டச் ஸ்கீரின் வகுப்புகள், புரொஜக்டர், செயல்வழி கற்றல் பாடங்கள் என அரசுப் பள்ளியை மக்களின் உதவியோடு தரம் உயர்த்தியுள்ளார் அதன் தலைமை ஆசிரியர்.
 

பெரம்பலூர் மாவட்டம், ஆலந்தூர் ஒன்றியம், நொச்சிக்குளம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஒன்று இயங்குகிறது. இங்கு ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை என 140 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். 

இந்தப் பள்ளிக்கு சமீபத்தில் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றவர் ராஜேந்திரன். இவர் இப்பள்ளியின் தரத்தை உயர்த்துவது குறித்து சக ஆசிரியர், ஆசிரியைகளுடன் கலந்தாலோசித்தார். இதுதொடர்பாக கிராம மக்கள் 65 பேரை பள்ளியின் புரவலராக (ஆதரவாளர்) சேர்த்தார். 

அவர்களிடம் இருந்து ரூ.65 ஆயிரத்தை பெற்று அதனை வங்கியில் வைப்புத் தொகையாக செலுத்தினார். மேலும், பள்ளியின் தரத்தை உயரத்த வேண்டும் என்று அதே கிராமத்தைச் சேர்ந்த நகைக் கடை உரிமையாளர் தன்னார்வலர் குமாரிடம் ரூ.1 இலட்சம், குன்னம் தொகுதி எம்.எல்.ஏ ஆர்.டி.இராமச்சந்திரனிடம் ரூ.50 ஆயிரத்தை பெற்றார்.

இந்தப் பணத்தைக் கொண்டு பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ், ஏ.சி.வகுப்பறைகள், டச் ஸ்கீரின் வகுப்புகள், புரொஜக்டர், செயல்வழி கற்றல் பாடங்கள், டேபிள் மற்றும் சேர் போன்ற வசதிகளை ஏற்படுத்தினார். தனியார் பள்ளிகளையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு இந்த அரசுப் பள்ளியின் தரத்தை உயர்த்தி நவீனப்படுத்தினார். 

அதுமட்டுமின்றி பள்ளியை நவீனப்படுத்திய பிறகு மாணவர்களை நவீனப்படுத்தவில்லை என்றால் எப்படி? தனியார் பள்ளி மாணவர்களைப் போன்று இப்பள்ளி மாணவர்களுக்கும் டை, பெல்ட், அடையாள அட்டை போன்றவை இந்தாண்டு முதல் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமா? இன்னும் இருக்கு...

மாணவர்களுக்கு ஆங்கில் பயிற்சி வகுப்புகள், பொது அறிவு சிந்தனை, செய்தித்தாள் வாசிப்பு, திருக்குறள், பழமொழிகள் கற்பது போன்ற திறன் வளர்ப்பு பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. இதனோடு சுற்றுச்சூழல், குடிநீர், கழிவறை, வகுப்பறை சுத்தம் போன்றவற்றிற்கு தனித்தனியே குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. பள்ளி வளாகத்தில் பசுமைத் தோட்டம் அமைத்து காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டு அவை சத்துணவில் சேர்க்கப்படுகின்றன.

"பள்ளியின் உட்கட்டமைப்பை மேம்படுத்தியதன் மூலம் மாணவர்களிடையே கற்றல் திறன் மேம்படுவதை பார்க்க முடிகிறது. புதிது புதிதாக  கற்றுக் கொள்வதில் மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். தனியார் பள்ளிகளுடன் போட்டிப் போடுவதற்காக எதையும் செய்யவில்லை. உலகத்தரமான கல்வியை கிராமப்புற மாணவர்களும் பெற வேண்டும் என்பதே எங்களது நோக்கம்" என்று பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் கூறியுள்ளார்.

click me!