
கிருஷ்ணகிரி
ஜி.எஸ்,டி மசோதாவை ஏற்றுக் கொள்ளாத மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிடம், பிரதமர் மோடி ஜிஎஸ்டியால் தமிழகத்தின் நிதி நிலைமை பாதிக்காது என்று உறுதியளித்தார் என்றும், அதன்பிறகே மசோதாவை அதிமுக ஆதரித்தது என்றும் தம்பிதுரை தெரிவித்தார்.
கிருஷ்ணகிரியை அடுத்த பழையப்பேட்டை காலபைரவர் கோவிலுக்கு சென்ற துணை சபாநாயகர் தம்பிதுரைக்கு அறங்காவலர்கள் குழு தலைவர் ஜெயவேல், கௌரவ தலைவர் சேகர், தர்மகர்த்தா முனுசாமி ஆகியோர் தலைமையில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து கோவிலில் தம்பிதுரை சாமி தரிசனம் செய்தார்.
பின்னர், அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அதில், “ஜி.எஸ்,டியில் மசோதாவை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்றுக் கொள்ளவில்லை. இதன்பிறகு பாரத பிரதமர் மோடி, ஜெயலலிதாவிடம் பேசி இந்த வரி விதிப்பால் தமிழகத்தின் நிதி நிலைமை எந்த காரணம் கொண்டும் பாதிக்கப்படாது என்று உறுதியளித்தார். அதன்பிறகே மசோதாவை அதிமுக ஆதரித்தது.
சரக்கு மற்றும் சேவை வரி தற்போது நடைமுறைக்கு வந்துள்ளதில் பல நன்மைகள் இருந்தாலும் சில குறைகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக பட்டாசு உள்பட பல பொருள்களுக்கு வரி விதிப்பில் குறைகள் உள்ளன. ஜி.எஸ்.டி.யில் உள்ள குறைகளை தீர்க்க அ.தி.மு.க. பாராளுமன்றத்தில் குரல் எழுப்பி, அந்த குறைகளை தீர்க்க பாடுபடும்.
கிருஷ்ணகிரியை அடுத்த படேதலாவ் ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர கடந்த 2005-ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் ரூ.30 கோடி செலவில் கால்வாய் வெட்டும் பணி தொடங்கியது. இதன்பிறகு திமுக அரசு அந்தத் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த நிலையில் தென்பெண்ணை ஆற்றில் எண்ணேகொல்புதூரில் இருந்து புதிய கால்வாய் வெட்டி படேதலாவ் ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் 110 விதிகளின் கீழ் அறிவித்தார். அதன்பிறகு எண்ணேகொல்புதூரில் இருந்து இடதுபுற கால்வாய் படேதலாவ் ஏரிக்கும், வலதுபுற கால்வாய் தர்மபுரி மாவட்டத்திற்கும் செல்வதற்கான சர்வே பணிகள் முடிவடைந்துள்ளது.
இரண்டு கால்வாய் பணிகளுக்கும் 350 கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகள் முடிவடைந்ததும் படேதலாவ் ஏரிக்கு தண்ணீர் வரும்” என்று அவர் தெரிவித்தார்.