
காஞ்சிபுரம் மாவட்டம் மணி மங்கலத்தில் வெள்ளத்தால் வெளியேற முடியாமல் சிக்கித் தவித்த கர்ப்பிணிப் பெண்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் 27-ம் தேதி தொடங்கிய வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துவருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, திருவாரூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது.
சென்னையில் பெய்துவரும் கனமழையால் வியாசர்பாடி, கொரட்டூர், வேளச்சேரி, சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட நகர்ப்பகுதிகளிலும் முடிச்சூர், கோவிலம்பாக்கம், சிட்லபாக்கம், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளிலும் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.
பருவமழையை எதிர்கொள்வதற்கும் வெள்ளத்தடுப்பிற்காகவும் அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மழைநீர் சூழ்ந்த பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் அப்பகுதிகளைவிட்டு வெளியேறி பாதுகாப்பான பகுதிகளுக்கு சென்றுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலத்தில் உள்ள வீடுகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன. மணிமங்கலத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 2 கர்ப்பிணி பெண்கள் இருந்தனர். அவர்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வந்தனர். அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கோ, திடீரென பிரசவ வலி வந்தாலோ மழைநீர் தேங்கியுள்ள அப்பகுதியிலிருந்து வெளியேற முடியாமல் தவித்துவந்தனர்.
இந்நிலையில், இதுதொடர்பாக சென்னை கட்டுப்பாட்டு அறையில் உள்ள வருவாய் மற்றும் பேரிடர் நிர்வாக ஆணையர் சத்யகோபாலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யும் ஐஏஎஸ் அதிகாரி அமுதாவுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அமுதா உடனடியாக செயல்பட்டார். ஐஏஎஸ் அதிகாரி அமுதா தலைமையில் பேரிடர் மீட்புப் படையினர், பரிசலுடன் அப்பகுதிக்கு சென்றனர்.
கர்ப்பிணி பெண்கள் இருவரையும் மீட்டு பரிசலில் பாதுகாப்பாக குளம்போல் தண்ணீர் தேங்கிய அப்பகுதியை விட்டு பாதுகாப்பாக மீட்டு கொண்டுவரப்பட்டு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மழைநீர் தேக்கத்தால் கர்ப்பிணி பெண்கள் சிக்கியுள்ளதாக தகவல் கிடைத்த அடுத்த அரை மணி நேரத்திற்குள் அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
தகவல் கிடைத்த கணத்திலே காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, ஐஏஎஸ் அதிகாரி அமுதா ஆகியோர் விரைந்து செயல்பட்டு பேரிடர் மீட்பு படையின் உதவியுடன் கர்ப்பிணி பெண்களை மீட்டனர். அதிகாரிகளின் விரைவான செயல்பாட்டிற்கு மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.