
சென்னையில் நேற்று இரவு 8 மணி முதல் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட மின்வெட்டு இன்று அதிகாலை வரை நீடித்ததால் பொது மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளானார்கள். அடிக்கடி ஏற்படும் இந்த மின்வெட்டுக்கு தொழில் நுட்ப கோளாறுதான் காரணம் என மின்துறை அமைச்சர் தங்கமணி விளக்கமளித்துள்ளார்.
சென்னையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பகலில் அனல்காற்று வீசுவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து விட்டது.நேற்று அதிக அளவாக 108 டிகிரி வெயில் அடித்தது.
வெயிலின் தாக்கம் காரணமாக இரவிலும் அனல் காற்று வீசுகிறது. கோடை வெப்பத்தால் பொதுமக்கள் தவித்து வரும் சமயத்தில் சென்னையில் அடிக்கடி மின் தடையும் ஏற்படுவதால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
நேற்று இரவு 8 மணியளவில் சென்னை அண்ணாசாலை, எழும்பூர், சென்ட்ரல், வேப்பேரி, புரசைவாக்கம், புதுப்பேட்டை, அண்ணாநகர், புளியந்தோப்பு, தண்டையார் பேட்டை, வண்ணாரப்பேட்டை, ராயபுரம், திருவொற்றியூர், மணலி, முகப்பேர், பாடி, வில்லிவாக்கம், சிட்கோநகர், அயனாவரம், ஓட்டேரி, புதுவண்ணாரப் பேட்டை, மயிலாப்பூர் உள்பட பல இடங்களில் மின் வினியோகம் தடைபட்டது.
வடசென்னை, மத்திய சென்னை பகுதிகளில் பல மணி நேரம் மின்சாரம் இல்லாததால் நகரமே இருளில் மூழ்கியது. இதனால் இரவு நேரத்தில் மக்கள் தூங்க முடியாமல் கடும் அவதிப்பட்டனர்.நள்ளிரவு 2 மணி வரை பல இடங்களில் மின் விநியோகம் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். மின்சாரம் எப்போது வரும் என்று மின்சார வாரிய அலுவலகத்துக்கு தொலைபேசி வாயிலாக கேட்டுக் கொண்டே இருந்தனர்.
பொறுமை இழந்த பொது மக்கள் தண்டையார் பேட்டை- திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு நள்ளிரவு 12 மணிக்கு சென்று திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
]
இது குறித்து தகவல் அறிந்த மின்துறை அமைச்சர் தங்கமணி, அதிகாரிகளுடன் வடசென்னை மின் நிலையத்துக்கு சென்றார்.
அங்கு மணலியில் இருந்து வரும் மின் கேபிள் துண்டிக்கப்பட்டு இருந்ததை கண்டு பிடித்தனர். அந்த கேபிளை சரி செய்யும் பணி அதிகாலை 3 மணி வரை நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே மின்தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்
இதனையடுத்து வட சென்னையில் அதிகாலை 4 மணி முதல் பல பகுதிகளில் மின் விநியோகம் சீரானது.