தமிழிசையை அவமதித்த அமித் ஷாவுக்கு நாடார் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது போன்ற போஸ்டர் வைரலாகி வருகிறது
ஆந்திர மாநிலத்தின் முதல்வராக 4ஆவது முறையாக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு விஜயவாடா அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரம்மாண்ட விழாவில் நேற்று பதவியேற்றுக்கொண்டார். இந்த விழாவில், முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, ஜே.பி.நட்டா, நிதின் கட்கரி, ரஜினிகாந்த், சிரஞ்சீவி, ஓ.பன்னீர் செல்வம், தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது, விழா மேடைக்கு வந்த தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய உள்துறை . அமைச்சர் அமித் ஷாவுக்கு வணக்கம் தெரிவித்தார். அப்போது அமித் ஷா, தமிழிசையை அழைத்துப் பேசினார்தமிழிசை ஏதோ சொல்ல வர, அதை அமித் ஷா மறுப்பது போல் சைகை காட்டி பேசும் வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. பாஜகவின் உள்கட்சி விவகாரத்தை பொதுவெளியில் பேசியதற்காக, தமிழிசை சவுந்தரராஜனை அமித் ஷா கண்டித்ததாக கூறப்படுகிறது. ஆனால், அந்த வீடியோவில் அவர்கள் இருவரும் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பது அதிகாரப்பூர்வமாக இதுவரை தெரியவில்லை.
நீட் தேர்வு 2024: கருணை மதிப்பெண்கள் ரத்து... மறுதேர்வு - மத்திய அரசு தகவல்!
சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா முடிந்து சென்னை திரும்பிய தமிழிசையிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்காமல் சென்று விட்டார். அதேசமயம், பொது மேடையில் தமிழிசையிடம் அமித் ஷா நடந்து கொண்ட விதத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், தமிழிசையை அவமதித்த அமித் ஷாவுக்கு நாடார் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது போன்ற போஸ்டர் வைரலாகி வருகிறது. ஆனால், அந்த போஸ்டரின் உண்மைத்தன்மை குறித்து அதிகாரப்பூர்வமாக உறுதிபடுத்த முடியவில்லை. திருநெல்வேலி மாவட்டம் நாடார் மகாஜன சங்கம் பெயரில் வெளியாகியுள்ள அந்த போஸ்டரில், “நாடார் குல மகளான அன்பு சகோதரி தமிழிசை சவுந்தரராஜனை முன்னாள் கவர்னர் என்றும் பாராமல் பொதுமேடையிலேயே வைத்து அவமதித்த அமித் ஷாவையும், அதற்கு காரணமான அண்ணாமலையையும் வன்மையாக கண்டிக்கிறோம். உடனடியாக அவர்கள் இருவரும் பொது மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல் தமிழ்நாடு தழுவிய நாடார்மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட வேண்டி வரும் என எச்சரிக்கிறோம்.” என கூறப்பட்டுள்ளது.