பெண்கள் என்றாலே நுகர்ந்துத் தள்ள வேண்டிய, இன்பம் தரும் பண்டம் என்கிற பொதுப்புத்தியை உருவாக்கி, கல்லாக் கட்டும் முதலாளிகளின் லாப வெறியால் புகுத்தப்படும் கலாச்சார சீர்கேட்டின் பலனாக, வளரும் தலைமுறையான மாணவர்கள் – இளைஞர்கள் சீரழிக்கப்படுகிறார்கள்.
பள்ளி மாணவனை தாக்கி விட்டு மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சி அளிக்கிறது என வேல்முருகன் கூறியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே மாணவனை கத்தியால் வெட்டிவிட்டு மாணவியை 3 பேர் கும்பல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவட் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என வேல்முருகன் கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித்தலைவரும், எம்எல்ஏவுமான வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குற்றங்கள் தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியா முழுவதும் கொடூரமாக நடந்தேறி வருகிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்தவை இன்று அன்றாட செய்தியாகிவிட்டது. அந்த வகையில், விழுப்புரம் அருகே செங்கமேடு பகுதியில் 12ம் வகுப்பு மாணவி, தனது சக பள்ளி மாணவனுடன் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல், மாணவனை தாக்கி விட்டு, மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த நிகழ்வு கடும் அதிர்ச்சி அளிக்கிறது.
பின்னர், மாணவனை 3 பேர் கொண்ட கும்பல் கத்தியால் வெட்டிவிட்டு வெள்ளிப்பொருட்கள், செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த மாணவன், மாணவி இருவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகிறது. வயது வித்தியாசமில்லாமல், பெண்கள் மீது நடத்தப்படும் கொடூரங்களால் பெண்கள் எப்போதும், ஒருவித அச்சத்துடன் வெளியே பயணிக்கும் நிலையை இந்த ஆணாதிக்க சமூகம் ஏற்படுத்தியுள்ளது.
அச்சத்தோடும், பயத்தோடும் பெண்கள் வாழவே தகுதியற்ற நாட்டில் தான் பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றவாளியாக்கி, உடை சரியில்லை, இரவு நேரத்தில் அங்கு என்ன வேலை, என அவள் நடத்தையின் மீதே சந்தேகப்பட்டு குற்றம் சாட்டுவது இச்சமூகத்தின் பொதுப்புத்தியாக உள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சி என்ற பெயரில் வளர்ந்து வரும் மற்றொரு அபாயம் ஆபாச இணைய தளங்கள். ஸ்மார்ட்போன்கள், பெண்களின் உடல்களை விதவிதமாக காட்டி பாலியல் வெறியூட்டுகிறது.
பெண்கள் என்றாலே நுகர்ந்துத் தள்ள வேண்டிய, இன்பம் தரும் பண்டம் என்கிற பொதுப்புத்தியை உருவாக்கி, கல்லாக் கட்டும் முதலாளிகளின் லாப வெறியால் புகுத்தப்படும் கலாச்சார சீர்கேட்டின் பலனாக, வளரும் தலைமுறையான மாணவர்கள் – இளைஞர்கள் சீரழிக்கப்படுகிறார்கள். பெண்களுக்கு எதிராக குற்றம் இழைக்கும் குற்றவாளிகள் பெரும்பாலும் போதைக்கு அடிமையாகி இருப்பதும், மது அருந்தி இருப்பதும், பல வழக்குகளில் நாம் காணும் ஒரு நிலை. வீதிதோறும் இருக்கக்கூடிய மதுபானக் கடைகள் ஆண்களின் உயிரை மட்டும் கொல்வதில்லை, பெண்களுக்கு எதிராகவும் செயல்படுகின்றது. சாராயம், குட்கா, கஞ்சா விற்று மாணவர்கள் – இளைஞர்களிடம் போதை பழக்கத்தை வேகமாகப் புகுத்தி சீரழித்து வருகிறது.
எனவே, தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுக்க தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும். விழுப்புரம் அருகே செங்மேட்டில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளிகள் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். எதிர்வரும் காலங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுத்து நிறுத்த நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதோடு, பாலியல் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைத்திட கடுமையாக சட்ட திருத்தங்களை கொண்டு வர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது என வேல்முருகன் கூறியுள்ளார்.