3 நாள்களில் பூண்டி வரும் கண்டலேறு…

Asianet News Tamil  
Published : Oct 13, 2016, 12:46 AM ISTUpdated : Sep 19, 2018, 02:54 AM IST
3 நாள்களில் பூண்டி வரும் கண்டலேறு…

சுருக்கம்

சென்னை நகர குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 3 நாட்களில் இந்த தண்ணீர் தமிழக எல்லையை வந்தடையும்.

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவைக்காக தமிழக – ஆந்திர அரசுகள் செய்துகொண்ட கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தத்தின்படி ஆந்திர அரசு ஆண்டுக்கு 12 டி.எம்.சி. தண்ணீரை கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு திறந்துவிட வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 8 டி.எம்.சி.யும், ஜூலை முதல் அக்டோபர் வரை 4 டி.எம்.சி.யும் தண்ணீர் வழங்க வேண்டும்.

கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த பலத்த மழை காரணமாக பூண்டி ஏரியில் போதிய அளவுக்கு தண்ணீர் இருந்ததால் கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் கேட்டு பெறவில்லை. கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கடும் வெயில் காரணமாக பூண்டி ஏரியின் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது.

இதனால் ஜூலை மாதத்தில் தண்ணீர் திறந்துவிடும்படி தமிழக பொதுப் பணித்துறை அதிகாரிகள் ஆந்திர அதிகாரிகளை கேட்டுக் கொண்டனர். ஆனால் அப்போது கண்டலேறு அணையில் போதிய தண்ணீர் இருப்பு இல்லாததால் தண்ணீர் திறந்துவிட முடியாது என்று ஆந்திர அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர். பூண்டி ஏரியில் தண்ணீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.

ஆந்திராவில் உள்ள விஜயவாடா மற்றும் கர்னூல் பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் அங்குள்ள ஸ்ரீசைலம் அணையிலிருந்து கடந்த வாரம் கண்டலேறு அணைக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த தண்ணீர் தற்போது கண்டலேறு அணைக்கு வரத்தொடங்கி உள்ளது. இதனால் தமிழக அதிகாரிகள் மீண்டும் ஆந்திர அதிகாரிகளை தொடர்புகொண்டு பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்துவிடும்படி கேட்டுக் கொண்டனர்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு தமிழகத்துக்கு 2 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டார். அதன்படி கண்டலேறு அணையிலிருந்து நேற்று காலை 6 மணிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு 200 கனஅடி வீதம் திறக்கப்படுகிறது. தண்ணீர் திறப்பு படிப்படியாக உயர்த்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கிருஷ்ணா நதி கால்வாய் வறண்டு இருப்பதால் கண்டலேறு அணையில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் 158 கிலோ மீட்டர் தூரம் கடந்து ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டுக்கு 3 நாட்களில் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பூண்டி ஏரிக்கு சென்றடைய மேலும் ஒரு நாளாகும்.

35 அடி உயரம் உள்ள பூண்டி ஏரியில் தற்போது நீர்மட்டம் 18.58 அடியாக உள்ளது. 3,231 மில்லியன் கனஅடி மொத்த கொள்ளளவில் நேற்று காலை 6 மணி நிலவரப்படி 142 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது.

பூண்டி ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு இணைப்பு கால்வாய் மூலம் வினாடிக்கு 72 கனஅடி தண்ணீரும், பேபி கால்வாய் மூலம் வினாடிக்கு 25 கனஅடி தண்ணீரும் என மொத்தம் 97 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது

PREV
click me!

Recommended Stories

மேகதாது - காவேரி விவகாரம்: பெங்களூருவில் வாகனங்களை நிறுத்த முயன்ற கன்னட போராட்டக்காரர்கள் கைது!
Vetri Tamilnadu Investors Conference :1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு.! முதலமைச்சர் விஜய் தலைமையில் கையெழுத்தான 97 ஒப்பந்தங்கள்!