
பெற்றோரின் சதாபிஷேக விழாவில் நாகப்பாம்புகளை வைத்து பூஜை நடத்தயி புரோகிதரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவான பாம்பாட்டியை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரேசன் (45). திருப்பாதிரிப்புலியூரில் உள்ள கோயிலில் புரோகிதராக உள்ளார். 80 வயது பூர்த்தியடைந்த இவரது தந்தைக்கு சதாபிஷேக விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விழாவில் நாக ஜோடிகளை கொண்டு பூஜை நடத்த முடிவு செய்தார். இதற்காக பாம்பாட்டி பழனி என்பவரின் உதவியை நாடியுள்ளார். அவரது உதவியுடன் 2 நாகப்பாம்புகள் பூஜைக்காக கொண்டு வரப்பட்டது. உற்றார், உறவினர் என சதாபிஷேக விழாவில் தம்பதியினரிடம் ஆசி பெற வந்த நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் பழனி கொண்டு வந்த 2 நாக ஜோடிகள் வெளியே விடப்பட்டது.
சீறிப்பாய்ந்த நாகப்பாம்புகளை கண்டு யாரும் அச்சப்படவில்லை.
புரோகிதர்கள் மந்திரங்களை முழங்கி நாக ஜோடிகளுக்கு பூஜைகளை செய்து கொண்டிருக்க, உறவினர்கள் இதை படம் பிடித்தும், செல்ஃபி எடுத்தும் உள்ளனர். பாம்பு சீறும்போதெல்லாம் பயத்துடனே புரோகிதர் மந்திரங்கள் ஓதுவதும். கலக்கத்தில் உறவினர்கள் பார்ப்பதும இதில் இடம் பெற்றுள்ளது. இந்த காட்சிகளெல்லாம் 17 நிமிட வீடியோ பதிவாக சமூக வலைத்தளங்களில் பரவியது.
இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட வன அலுவலர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் வனத்துறையினர், நாக ஜோடி பூஜை தொடர்பாக விசாரணை நடத்தினர். இதில் புரோகிதர் சுந்தரேசன் நாக ஜோடிகளை வைத்து பூஜைகள் செய்தது உறுதிப்படுத்தப்பட்டதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சுந்தரேசன் கைது செய்யப்பட்டு நீதிபதிகள் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் பாம்புகளை கொண்டு வந்த பாம்பாட்டி பழனியை போலீசார் தேடிவருகின்றனர். இச்சம்பவம் கடலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.