நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு; ஜனாதிபதியிடம் ஒப்புதல் பெற தமிழக அரசை வலியுறுத்தும் மருத்துவர்கள்...

First Published May 18, 2018, 11:16 AM IST
Highlights
Permanent exemption from NEET Examination to Tamil Nadu Doctors demonstration


பெரம்பலூர்

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்களிக்க ஜனாதிபதியிடம் ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தை சேர்ந்த மருத்துவர்கள் 20 அம்ச கோரிக்கைகளை மத்திய - மாநில அரசுகள் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ.) நிறைவேற்ற வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நேற்று ஆட்சியர் அலுவலகம் முன்பு நடத்தினர். 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் மருத்துவர் கண்ணன் தலைமை தாங்கினார். 

இந்த ஆர்ப்பாட்டத்தில், "முதுநிலை பட்டப்படிப்புக்கான இந்த ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையில், அரசு மருத்துவர்கள் பயனடையும் வகையில் உரிய சிறப்பு மதிப்பெண் வழங்க வேண்டும்.

அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவ பட்டப்படிப்பில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தனி சட்டத்தை வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே தமிழக அரசு நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்களிக்க ஜனாதிபதியிடம் ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். 

ஒரு நபர் குழு மூலமாக, தமிழக அரசு மருத்துவர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியமும், நிர்வாக படி மற்றும் பிற ஊதியப்படிகளை வழங்கவும், 

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவும் மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மருத்துவர்கள் பல்வேறு முழக்கங்களை எழுப்பினர்.

click me!