பணிந்தது மத்திய அரசு..!! - கட்டாய பட்டியலில் சேர்க்கப்பட்டது பொங்கல் விடுமுறை

First Published Jan 10, 2017, 3:36 PM IST
Highlights


பொங்கல் பண்டிகை மத்திய அரசின் கட்டாய விடுப்பு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது என்ற தகவலை நேற்று அதிர்ச்சி தகவலாக வெளியிட்டன செய்தி சேனல்கள்.

கடந்த 15 வருடங்களாகவே பொங்கல் தினமானது கட்டாய விடுப்பு பட்டியலில் இல்லை என்பதுதான் உண்மை.

அது புரியாமல் யாரோ சில நிருபர்கள் கிளப்பி விட்டதால் தமிழகமே பற்றி கொண்டது.

முதலமைச்சர் முதல் கடைக்கோடி தமிழனான முனியாண்டி வரை கொந்தளிக்க தொடங்கி விட்டனர்.இதனால சற்று ஆடித்தான் போனது மத்திய அரசு.

பாமகவின் அன்புமணி போன்ற ஒரு சிலர் மட்டுமே இந்த விசயத்தை சரியாக புரிந்து கொண்டு இது ஒன்றும் புதிதல்ல, பழைய நடைமுறைதான் என தெரிவித்தனர்.

ஆனாலும் முதலமைச்சர், எதிர்கட்சி தலைவர், அதிமுக பொதுசெயலாளர் சசிகலா உள்ளிட்டோரும் அறிக்கைகள் வெளியிட்டனர்.பிரதமருக்கு கடிதங்களும் பறந்தன.திமுக சார்பில் போராட்ட தேதியும் அறிவிக்கப்பட்டது.

யாரோ கிளப்பிவிட்ட இந்த பிரச்சனை ஒரு வகையில் நன்மையை கொடுத்திருக்கிறது.

ஒட்டுமொத்தமாக தமிழகத்தையும் தமிழக மக்களையும் புறக்கணிக்கிறது பிஜேபி அரசு என்ற கருத்து வலுவாக பரவியது. இதை புரிந்து கொண்ட மத்திய அரசு 24 மணி நேரத்துக்குள் இதுநாள் வரை கட்டாய விடுப்பு பட்டியலில் இல்லாமல் இருந்த பொங்கல் தினத்தை கட்டய விடுப்பு பட்டியலில் அவசர அவசரமாக சேர்த்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பொங்கலுக்கு பதிலாக கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பிரபலமாக கொண்டாடப்படும் தசரா பண்டிகையை பட்டியலில் இருந்து தூக்கியுள்ளது மத்திய அரசு.

எது எப்படியோ தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்ட ஒரு விஷயம் தமிழகத்தில் எழுந்த கொந்தளிப்பால் நன்மையில் முடிந்திருக்கிறது.

click me!