தமிழக அரசுக்கு மூக்குடைப்பு... ஒரே கல்லில் இரண்டு மாங்கா அடித்த பொன். மாணிக்கவேல்

By vinoth kumarFirst Published Nov 30, 2018, 3:25 PM IST
Highlights

சிலைக்கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. இன்றுடன் ஓய்வுபெறும் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேலை ஒரு வருடத்திற்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்க நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது

சிலைக்கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. இன்றுடன் ஓய்வுபெறும் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேலை ஒரு வருடத்திற்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்க நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

 

முன்னதாக சிலை கடத்தல் வழக்குகளை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான அதிகாரிகள் விசாரித்து வந்தனர். கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி சி.பி.ஐ.,க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. 

இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது. அதில் சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றும் தமிழக அரசின் ஆணையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. பொன்.மாணிக்கவல் மேலும் ஒராண்டு காலம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக நீடிப்பார்.

 

பொன்.மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக ஓராண்டுக்கு அரசு நியமிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் நியமன ஆணையை அரசு உடனே வெளியிடவும் ஆணையிட்டுள்ளது. பொன்.மாணிக்கவேல் எடுக்கும் நடவடிக்கையை நீதிமன்றத்துக்கு தெரிவித்தால் போதும். எந்த அதிகாரியிடமும் விசாரணை விவரங்களை அளிக்க வேண்டாம் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இன்றுடன் பணி ஓய்வு பெற உள்ள நிலையில் பொன்.மாணிக்கவேல் பதவி நீட்டிப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்த தீர்ப்புக்கு பிறகு பேட்டியளித்த பொன்.மாணிக்கவேல் ஓராண்டுக்கு சிறப்பு அதிகாரியாக நியமித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளை ஓராண்டுக்குள் முடிக்க முயற்சிப்பேன் என உறுதிப்பட தெரிவித்துள்ளார். இதுவரை இரவு பகலாக வேலை பார்த்தோம். எங்களால், யாருக்கும் சிறுமை வராது. முன்பை போன்றே கடுமையாக உழைப்போம் என்று பொன்.மாணிக்கவேல் பேட்டியளித்துள்ளார்.

click me!