பாபு மறைத்து வைத்திருந்த கத்தியால் விசாலாட்சி கழுத்தை அறுத்தார். இதனால் அவர் அலறித் துடித்தபடி ரத்த வெள்ளத்தில் சாய்ந்து இறந்தார்.
கோவை அருகே போத்தனூரை சேர்ந்தவர் பாபு (50). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சுமதி (42). இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகின்றன. குழந்தைகள் இல்லை. இதனால், இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மீண்டும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் சுமதி கோபித்து கொண்டு, பொள்ளாச்சி சிடிசி காலனியில் உள்ள தனது தாய் விசாலாட்சி (60) வீட்டுக்கு சென்று விட்டார். அங்கு தாயுடன் வசித்து வந்தார்.
அதன்பின்னர் பாபு, அடிக்கடி மாமியார் வீட்டுக்கு சென்று, சுமதியிடம் தகராறு செய்து, தன்னுடன் மீண்டும் குடும்பம் நடத்த வரும்படி அழைத்துள்ளார். அப்போது அவர் மது அருந்தி போதையில் இருந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த சுமதி, கடந்த சில நாட்களுக்கு முன், பாபுவிடம் இருந்து விவாகரத்து கேட்டு, நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனால், பாபு கடும் ஆத்திரம் அடைந்தார்.
இந்நிலையில், நேற்று நள்ளிரவில் பாபு, மது குடித்து போதையில் மாமியார் விசாலாட்சி வீட்டுக்கு சென்றார். அங்கு வெளியே நின்றபடி, சுமதியை திட்டியபடி தகராறு செய்தார். இதை பார்த்த விசாலாட்சி கதவை திறந்து வெளியே வந்து பாபுவை கண்டித்தார். இதில் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பாபு மறைத்து வைத்திருந்த கத்தியால் விசாலாட்சி கழுத்தை அறுத்தார். இதனால் அவர் அலறித் துடித்தபடி ரத்த வெள்ளத்தில் சாய்ந்து இறந்தார்.
தாயின் அலறல் சத்தம் கேட்டு, சுமதி அலறியடித்து கொண்டு வெளியே வந்தார். அவரை கீழே தள்ளிய பாபு, சுமதியின் கழுத்தையும் அறுத்து கொலை செய்தார். பின்னர், வீட்டுக்குள் சென்ற பாபு, மேற்கூரையில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விசாலாட்சியின் மகன் பிரகாஷ் அப்பகுதியில் வசிக்கிறார். இன்று காலை வழக்கம்போல் தாயை பார்க்க அங்கு சென்றார். அப்போது தாயும், தங்கையும் ரத்த வெள்ளத்தால் சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பாபு தூக்கில் சடலமாக கிடந்தார். தகவலறிந்து பொள்ளாச்சி கிழக்கு போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.