விரைவில் 6, 7 மற்றும் 8ம் வகுப்பு ஆசிரியர்களுக்கும் பயோமெட்ரிக் முறை அமல்படுத்த உள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்
விரைவில் 6, 7 மற்றும் 8ம் வகுப்பு ஆசிரியர்களுக்கும் பயோமெட்ரிக் முறை அமல்படுத்த உள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறுகையில்; தமிழகத்தில் தொடர்ந்து குடிமராமத்து பணி செய்ததால், அவ்வப்போது அதிக மழை பெய்த போதிலும் எங்கும் வெள்ளம், சேதம் இல்லை. தமிழகத்தில், தடையற்ற மின்சாரம் வழங்கப்படுவதால், தொழில் துவங்க ஏற்ற மாநிலமாக, தமிழகம் திகழ்ந்து வருகிறது. சிறப்பாசிரியர் தேர்வில் எந்த முறைகேடும் நடக்கவில்லை, சான்றிதழ்களில் சில குளறுபடி உள்ளது தெரிய வந்துள்ளது. அதை சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
தமிழகத்தில் டிசம்பர் மாத இறுதிக்குள் 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதல்கட்டமாக சென்னை உள்பட 4 மாவட்டங்களில் 300 பள்ளிகளில் இணையதள வசதியுடன் கம்ப்யூட்டர் வசதி ஏற்படுத்தப்படும். இந்த திட்டம் விரைவில் அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தப்படும்.
வணிகவியல் மாணவர்களை சிறந்த பட்டய கணக்காளர்களாக உருவாக்க 300 பட்டய கணக்காளர்களை கொண்டு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். இதன் மூலமாக 25 ஆயிரம் மாணவர்கள் பயன் அடைவார்கள். பயோமெட்ரிக் முறை தற்போது 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் 6, 7 மற்றும் 8ம் வகுப்பு ஆசிரியர்களுக்கும் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்படும் என செங்கோட்டையன் கூறியுள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவின் ஆட்சி ஆட்டம் கண்டு வருகிறது. அமைச்சர்களின் எந்த துறையில் பார்த்தாலும் ஊழல் மலிந்துள்ளது. ஆனால் அமைச்சர் என்ற பொறுப்புடன் பள்ளி கல்வித்துறையில் செங்கோட்டையன் மட்டும் தொடர்ந்து பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். இவரது செயல்பாடு பொதுமக்கள் மிகவும் கவர்ந்துள்ளது.