
கோயம்புத்தூர்
பொள்ளாச்சி - திண்டுக்கல் சாலையை நவீன தொழில்நுட்பத்துடன் சிமெண்டு சாலை போடப்பட்டு, நான்கு வழிச் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.
பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், விபத்துக்களை தடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, ஊஞ்சவேலாம்பட்டி தாராபுரம் சாலைச் சந்திப்பில் இருந்து பொள்ளாச்சி தேர்நிலை வரை நான்கு கிலோ மீட்டர் தொலைவுக்கு நடைபாதை தடுப்பு மைய சுவருடன், நான்கு வழிச் சாலையாக மாற்ற மத்திய அரசு ரூ.24 கோடியே 77 இலட்சத்து 60 ஆயிரம் நிதி ஒதுக்கிட்டு உள்ளது.
தற்போதுள்ள சாலையின் அகலம் 10 மீட்டரில் இருந்து 30 மீட்டராக அகலப்படுத்தப்பட உள்ளது.
இந்த நான்கு வழிச்சாலை பணி தொடக்க விழா, பொள்ளாச்சி - உடுமலை சாலை டீச்சர்ஸ் காலனி அருகில் நடந்தது.
இதற்கு உதவி ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை வகித்தார். மகேந்திரன் எம்.பி. முன்னிலை வகித்தார். நெடுஞ்சாலைத்துறை கோவை கோட்ட பொறியாளர் செல்வக்குமார் வரவேற்றுப் பேசினார். பணிகளை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த விழாவில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசியது:
“பொள்ளாச்சி நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டது நான்கு வழிச்சாலை திட்டம்.
தற்போது தேர்நிலையில் இருந்து உடுமலை சாலை ஊஞ்சவேலாம்பட்டி வரை 4 வழிச் சாலையாக மாற்றப்பட உள்ளது. இது பழனி வரை செல்லும் முக்கிய சாலையாகும். எனவே, பொள்ளாச்சியில் இருந்து திண்டுக்கல் வரை உள்ள சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்ததன் காரணமாக பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் இருந்து ஈச்சனாரி வரை நான்கு வழிச் சாலையாக மாற்ற ரூ.500 கோடியை ஒதுக்கியுள்ளது.
இந்த சாலை பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இங்கு தார் சாலைக்கு பதிலாக நவீன தொழில்நுட்பத்துடன் சிமெண்டு சாலை போடப்பட்டு வருகிறது. இதனால் இந்த சாலை பல ஆண்டுகளுக்கு பாதுகாப்பாக இருக்கும்.
பொள்ளாச்சி நகரில் மாநில நெடுஞ்சாலை சார்பில் சாலையை அகலப்படுத்துவதற்கு நிலம் கையகப்படுத்தி, நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு தொகை வழங்க ரூ.34 கோடி நிதி ஒதுக்கப்பட்டு ஐந்து மாதங்கள் ஆகிவிட்டது.
நிலம் கையகப்படுத்தும் போது, தனியார் நிலம் குறைவாகவும், அரசு நிலங்கள் அதிகமாகவும் தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பொள்ளாச்சி நகரில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டத்தினால் ஏற்படும் இடையூறுகளை மக்கள் பார்த்து கொள்ள வேண்டும். இந்த திட்டம் நிறைவேறும்போது, சுகாதாரமான நகரமாக பொள்ளாச்சி மாறும். ஜமீன் ஊத்துக்குளி கிருஷ்ணா குளத்தில் இருந்து தேவம்பாடி குளத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.
பொள்ளாச்சி நகரில் சமத்தூர் ராம ஐய்யங்கார் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் தொடக்க, அரசு கலைக்கல்லூரி அமைக்க இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது” என்று அவர் பேசினார்.
இந்த விழாவில் கஸ்தூரிவாசு எம்.எல்.ஏ., நகராட்சி முன்னாள் தலைவர் கிருஷ்ண குமார், முன்னாள் எம்.எல்.ஏ. முத்துகருப்பண்ணசாமி, என்.ஐ.ஏ. கல்வி நிறுவனங்களின் செயலாளர் ராமசாமி, பி.ஏ. கல்வி நிறுவனங்களின் தலைவர் அப்புக்குட்டி, பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை தலைவர் ஜி.டி.கோபாலகிருஷ்ணன், தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் அருண் கார்த்திக், அ.தி.முக. பொள்ளாச்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் தாமோதரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
விழா முடிவில் நகராட்சி முன்னாள் துணை தலைவர் விஜயகுமார் நன்றித் தெரிவித்தார்.