உயரதிகாரிகளின் டார்ச்சர் - ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

Asianet News Tamil  
Published : Dec 25, 2016, 11:22 AM ISTUpdated : Sep 19, 2018, 02:53 AM IST
உயரதிகாரிகளின் டார்ச்சர் - ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

சுருக்கம்

உயர் அதிகாரிகள் கூடுதல் பணிகளை கொடுத்து டார்ச்சர் செய்ததால், ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை அருகே வாடிப்பட்டியை சேர்ந்தவர் கோபிநாத். கடந்த 2013ம் ஆண்டு பேட்ஜில் போலீசில் காவலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். காவலர் கோபிநாத் தூத்துக்குடி காவலர் பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்து பின்னர், பழனி பாட்டாலியனில் வேலை செய்து வந்தார். சமீபத்தில் கோபிநாத், சென்னை பரங்கிமலை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், நேற்று இரவு பணிக்கு சென்ற கோபிநாத், இன்று அதிகாலையில் அவரிடம் இருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு, அங்கிருந்த சக போலீசார் ஓடிவந்தனர். அப்போது கோபிநாத், ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததார்.

இதையடுத்து, சடலத்தின் மீது துணியைபோட்டு மூடி வைத்தனர். ஆனால், சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பவில்லை. நீண்ட நேரத்துக்கு பின், போலீசார் சடலத்தை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

இதுகுறித்து ஆயுதப்படை காவலர்கள் சிலர் கூறுகையில், “நாங்கள் பல்வேறு ஆசைகளுடனும், லட்சியங்களுடனும் இந்த வேலையில் சேர்ந்துள்ளோம். ஆனால், எங்கள் லட்சியம் மண்ணோடு மண்ணாகி போகிறது. இங்குள்ள உயர் அதிகாரிகள், எங்களுக்கு கூடுதல் பணி சுமையை தருகிறார்கள். எவ்வளவுதான் அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும் என நினைத்தாலும், முடியவில்லை.

உயர் அதிகாரிகளின் வீட்டுக்கு பால் பாக்கெட், மளிகை சாமான்கள் வாங்கி கொடுப்பது உள்பட பல வேலைகளை கொடுக்கிறார்கள். போலீஸ்காரர்கள் சிலரை பல்வேறு இடத்துக்கு பாதுகாப்பு பணிக்கு அனுப்புகின்றனர். அதனால், இங்கு காவலர் பற்றாக்குறை உள்ளது. இதை சாதகமாக வைத்து கொண்டு எங்களுக்கு 2 ஷிப்டில் வேலை செய்ய வைக்கிறார்கள்.

தற்போது தற்கொலை செய்து கொண்ட கோபிநாத், இதுபோன்ற கூடுதல் வேலை பளுவால் கடுமையாக பாதிக்கப்பட்டார். இதை பற்றி எங்களிடம் பலமுறை கூறி மன வருத்தம் அடைந்தார். நாங்கள் அவருக்கு அறிவுரை கூறினோம். ஆனால், உயர் அதிகாரிகளின் டார்ச்சரால் மன உளைச்சலில் அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என்றனர்.

PREV
click me!

Recommended Stories

ஏப்ரல் 1 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு.. மக்களிடம் கேட்கப்பட உள்ள 33 கேள்விகள்
சிக்கன் விலை உச்சம்.. விஸ்வரூபமெடுத்த கறிக்கோழி விவசாயிகள் பிரச்சனை.. முக்கிய குழு அமைத்த அரசு!