
மசாஜ் நிலையங்களில் பாலியல் தொழில் நடப்பதாக புகார் வந்தால் தொடர்புடைய மசாஜ் நிலையங்களில் சோதனை நடத்த உள்ளூர் காவல் நிலைய அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை அண்ணா நகரில் உள்ள மசாஜ் நிலையத்தில் பாலியல் தொழில் நடப்பதாக காவல்துறையினருக்கு புகார் வந்தது. அந்த புகாரின் அடிப்படையில் மசாஜ் செண்டருக்கு சென்ற போலீசார் அங்கு சோதனை நடத்தினர். அந்த சோதனையில் உரிமையாளர் ஹேமா ஹுவாரணி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை அடுத்து வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையாளர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் உரிமையாளர் இடைக்கால தடை பெற்றிருந்தார். அதை தொடர்ந்து தடையை ரத்து செய்யக்கோரி காவல்துறை சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஸ் சந்ரா முன்பு நடைபெற்றது. அப்போது சுதந்திரமான முறையில் தொழில் நடத்தும் உரிமையில் காவல்துறை தலையிட முடியாது என்று வாதிடப்பட்டது. மேலும் விபச்சார தடுப்பு பிரிவு அதிகாரிக்கு தான் சோதனை நடத்த அதிகாரம் உள்ளது என்றும் மனுதாரர் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அதை தொடர்ந்து, காவல்துறை சார்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, 1987 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசின் உத்தரவில் உள்ளூர் காவல்நிலைய அதிகாரிகளும் சோதனை நடத்துவதற்கான அதிகாரம் உள்ளது என்று விளக்கம் அளித்தார்.
அப்பாவி பெண்கள் பாதிக்கப்படும் போது காவல்துறை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது என்று உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற தீர்ப்புகளையும் அவர் மேற்கொள்காட்டினார். இதை அடுத்து மசாஜ் நிலையங்களில் பாலியல் தொழில் புகார் வந்தால் உள்ளூர் போலீசார் சோதனை நடத்த அதிகாரம் உள்ளது என கூறி வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதன் மூலம் உள்ளூர் போலீஸாருக்கு மசாஜ் நிலையங்களில் பாலியல் தொழில் நடப்பதாக புகார் வந்தால் உடனடியாக அங்கு சோதனை நடத்த அதிகாரம் உள்ளது என்பது தெளிவுப்படுத்தப்பட்டது.