
cஅரசு பேருந்து ஓட்டுநரை காவல் நிலையம் அழைத்துச் சென்று அவர் மீது, இளையன்குடி காவல் ஆய்வாளர் சாராயத்தை ஊற்றியதில், மனவேதனை அடைந்த ஓட்டுநர் தீக்குளிக்க முயற்சி செய்தார்.
இளையான்குடி அருகே உள்ள இடையவலசைக் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி (42). இவர் பரமக்குடியில் உள்ள அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஒட்டுநராக பணியாற்றுகிறார்.
இளையான்குடி புதூர் பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் பெரியசாமி நின்று கொண்டிருந்தார். அப்போது, இளையான்குடி காவல் ஆய்வாளர் பாலாஜி சுற்ருப் பணியில் இருந்தார்.
பாலாஜி, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டார். அதன்பேரில் சாலையோரம் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள்கள் அப்புறப்படுத்தப்பட்டன. ஆனால், பெரியசாமி தனது மோட்டார் சைக்கிளை அப்புறப்படுத்தாமல் இருந்தார்.
இதனால் கோபமடைந்த பாலாஜி, உடனடியாக மோட்டார் சைக்கிளை எடுக்கும்படி எச்சரித்தார். மேலும், பெரியசாமியை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பெரியசாமியை மிரட்டி, அவர் மீது சாராயத்தை ஊற்றி அவரை துன்புறுத்தி ஆய்வாளர் பாலாஜி அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஆய்வாளரின் இந்த இழிசெயலால் மனவேதனை அடைந்த பெரியசாமி, தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொள்ள முயற்சி செய்தபோது, அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டனர்.
பின்னர் காவல் ஆய்வாளர் பாலாஜி தன்னை துன்புறுத்தியதாக பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் மனு ஒன்றை அனுப்பினார். அந்த புகாரின்பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பெரியசாமி சொன்னது உண்மையாகும் பட்சத்தில், ஆய்வாளர் பாலாஜி மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.