
சென்னையில் ரூ. 4 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை மணலியில் உள்ள கிடங்கு ஒன்றில் ஏராளமான செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ஆந்திர போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலறிந்து வந்த ஆந்திர போலீசார் மணலியில் உள்ள ஒரு கிடங்கில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அங்கு ரூ. 4 கோடி மதிப்புள்ள சுமார் 15 டன் கொண்ட செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருந்த கார்த்திக், அப்துல்ரசாக், கண்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.