கச்சநத்தம் சாதிய படுகொலையில் போலீஸ்தான் முக்கிய குற்றவாளி... தீர விசாரிக்க சொல்கிறார் பாலகிருஷ்ணன்...

 
Published : Jun 07, 2018, 06:20 AM ISTUpdated : Sep 19, 2018, 02:29 AM IST
கச்சநத்தம் சாதிய படுகொலையில் போலீஸ்தான் முக்கிய குற்றவாளி... தீர விசாரிக்க சொல்கிறார் பாலகிருஷ்ணன்...

சுருக்கம்

Police are main accuse in Kachanatham caste murder case says Balakrishnan

சிவகங்கை
 
சிவகங்கையில் உள்ள, கச்சநத்தம் கிராமத்தில் மூன்று பேர் சாதிய படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் காவலர்களை முக்கிய குற்றவாளிகளாக சேர்க்க வேண்டும் என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கச்சநத்தம் கிராமத்தில் ஆறுமுகம், மருதுபாண்டி, சந்திரசேகர் ஆகிய மூன்று பேர் வெட்டி சாதிய படுகொலை செய்யப்பட்டனர். மேலும் ஐந்து பேர் படுகாயமடைந்து தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஆவரங்காடு கிராமத்தைச் சேர்ந்த ஆறு பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். மற்ற ஏழு பேரை தனிப்படை காவலாளர்கள் கைது செய்து மீதமுள்ளவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் நடந்த கச்சநத்தம் கிராமத்திற்கு நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். 

அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம், “கச்சநத்தம் கிராமத்தில் வெட்டி சாதிய படுகொலை செய்யப்பட்ட சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டது. இதனை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும்.

கடந்த 50 ஆண்டுகளாக இப்பகுதி மக்களை அடிமைகளாக வைத்துள்ளனர். அவர்கள் ஆடு, மாடு வளர்க்கக்கூட அனுமதிக்கவில்லை. அங்கிருந்த கூட்டுறவு சங்கத்தை கூட மற்ற சாதியினர் பறித்துள்ளனர். தமிழகத்தில் இப்படிப்பட்ட கிராமம் இருந்தது இது ஒன்றுதான்.

இந்தப் பகுதியில் பலமுறை சாதிய தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தாலும் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. 

தற்போது மூன்று பேர் சாதிய படுகொலை செய்யப்பட்ட பின்னர்தான் இரண்டு காவல் உதவி ஆய்வாளர்களை தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளனர். இந்த தண்டனை அவர்களுக்கு போதுமானது இல்லை. 

இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு துணையாக இருந்த அனைத்து காவலாளர்கள் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும். கொலை சம்பவத்தில் காவலாளர்களை முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கவேண்டும். 

அப்போதுதான் வரும் காலத்தில் இது போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் நடைபெறாமல் சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க முடியும்.

தமிழகத்தில் இன்னமும் சாதி ரீதியிலான மோதல்கள் நடப்பது துரதிஷ்டவசமானது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற சட்டம் நிறைவேற்றிய பின்னரும் அவை இதுவரை நடைமுறைக்கு வரவில்லை. 

எனவே, இதுபோன்ற சட்டங்கள் நடைமுறைக்கு வந்தால்தான் சாதி ரீதியிலான மோதல்கள் குறையும்” என்று அவர் தெரிவித்தார். 

இந்தப் பேட்டியின்போது மாவட்டச் செயலாளர் கந்தசாமி, ஒன்றியச் செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் உடன் இருந்தனர்.
 

PREV
click me!

Recommended Stories

கீழடி, நம் தாய்மடி! பொருநை, தமிழரின் பெருமை! - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
வாக்காளர் பட்டியல் வெளியீடு, 6.5 லட்சம் பேர் நீக்கம் மொத்தம் 32,25,198 வாக்காளர்கள்