தேர்வு எழுதவந்த பிளஸ் 2 மாணவனுக்கு அரிவாளால்  வெட்டு; மூன்று விரல்களை துண்டித்த சக மாணவர்கள்...

First Published Mar 10, 2018, 8:29 AM IST
Highlights
plus 2 student three fingers Cut by Fellow students


மதுரை 

மதுரையில் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தேர்வு எழுதவந்த பிளஸ் 2 மாணவனின் மூன்று விரல்களை சக மாணவர்கள் அரிவாளால்  வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.  

மதுரை மாவட்டம், மேலூர் அருகே திருவாதவூரிலுள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த மாயக்கண்ணன் மகன் அர்ஜூன் (18). பிளஸ் 2 மாணவர். இவர் நேற்று காலையில் தேர்வு எழுத பள்ளிக்கு வந்தார். 

பள்ளி வளாகத்திலுள்ள ஆய்வுக்கூடம் அருகே படித்துக் கொண்டிருந்தபோது சுண்ணாம்பூரைச் சேர்ந்த அவரது சக மாணவர்கள் கார்த்திக் ராஜா (18), சரவணகுமார் (18) ஆகியோருடன் அர்ஜூனுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. 

இதனையடுத்து கார்த்திக் ராஜாவும்,  சரவணனும் தன்னிடம் இருந்த கத்தி மற்றும் அரிவாளால் அர்ஜூனை சரமாரியாக வெட்டினர். இதில் அர்ஜூனுக்கு தலை, தோள்பட்டை மற்றும் காலில் காயம் ஏற்பட்டது. மேலும், கையில் மூன்று விரல்களும் துண்டாயின. 

எனவே, அர்ஜூன் இரத்த வெள்ளத்தில் மயங்கிக் கீழே விழுந்ததும்  கார்த்திக் ராஜாவும், சரவணனும் பள்ளியின் சுற்றுச்சுவரை ஏறிக் குதித்து தப்பித்து விட்டனர். 

அதில் பலத்த காயமடைந்த அர்ஜூனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்த தகவலறிந்த மதுரை ஊரக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் மற்றும் மேலூர் காவலாளார்கள் விரைந்து வந்து சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர். 

பள்ளித் தேர்வு முடியும்வரை ஒரு சார்பு-ஆய்வாளர் தலைமையில் ஐந்து காவலாளர்கள் தினமும் பாதுகாப்பு அளிக்குமாறு எஸ்.பி. உத்தரவிட்டார். மேலும், தனிப்படை அமைத்து மாணவர்கள் கார்த்திக் ராஜா, சரவணகுமார் ஆகியோரை காவலாளர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மாணவன் அர்ஜூனை சக மாணவர்களான கார்த்திக்ராஜா மற்றும் சரவணன் ஆகியோர் கத்தி மற்றும் அரிவாளால் தாக்கி கொலை செய்ய முயற்சித்ததற்கு முன்விரோதமே காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இம்மாணவர்களிடையே, வகுப்பறையில் உள்ள இருக்கையில் அமர்வது தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாம். மேலும், அவர்களிடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில்தான் நேற்று தேர்வு எழுதவந்த அர்ஜூனின் கை விரல்களை இருவரும் துண்டிக்க முயன்றுள்ளனர் என்பது காவலாளர்களின் விசாரணையில் தெரிந்தது.
 

click me!