
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வள்ளிப்பட்டு கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் மாணவணும் அதேபள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவியும் ஒரே நாளில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வள்ளிப்பட்டு கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிரபாகரன் என்ற மாணவன் பிளஸ்-2 படித்து வருகிறார்.
நேற்று காலை மாணவன் பிரபாகரன் வழக்கம் போல் சீருடையில் பள்ளிக்கு சென்றார். வகுப்பறைக்குள் ஆசிரியர் பாடம் நடத்தி கொண்டிருந்த நேரத்தில் மாணவன் பிரபாகரன் பாட்டிலில் மறைத்து எடுத்து வந்த விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
வாயில் நுரை தள்ளி மயக்கமடைந்த மாணவனை சகமாணவர்கள், ஆசிரியர்கள் உதவியுடன் மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு மாணவனின் உடல் நிலை மிகவும் மோசமடைந்ததையடுத்து, கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக மாற்றப்பட்டார். அங்கு மாணவன் பிரபாகரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாணவன் தற்கொலைக்கு முயன்ற இதே பள்ளியில் வள்ளிப்பட்டு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த ஒரு மாணவி திலகவதி என்பவர் பிளஸ்-2 படித்து வருகிறார். இந்த மாணவி நேற்று மாலை பள்ளி நேரம் முடிந்து தனது வீட்டிற்கு சென்றார். வீட்டில் ஏதோ ஒரு விவகாரம் தொடர்பாக பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவி திலகவதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்துள்ளார்.
அந்த மாணவியை பெற்றோர் மீட்டு வாணியம் பாடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்ட மாணவி திலகவதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஒரே பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற நிலையில் மாணவரும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவங்கள் குறித்து வாணியம்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.