இனி மஞ்சப்பை தான்.. ஆர் யூ ரெடி..? - புது அறிவிப்பு

By Thanalakshmi VFirst Published Nov 27, 2021, 9:44 PM IST
Highlights

நெகிழி பொருட்களுக்கு எதிராக மீண்டும் மக்கள் துணிப் பைகளுக்கு திரும்பும் வகையில் ”மீண்டும் மஞ்சப்பை ” எனப்படும் விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மேலும் நெகிழி பொருட்களுக்கு தடை  விதிக்கப்பட்டுள்ள நிலையில், நெகிழி பொருட்களுக்கு எதிராக மீண்டும் மஞ்சப்பை  எனப்படும் விழிப்புணர்வு இயக்கம் தொடங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 
 

ஒரு நெகிழி பையின் சராசரி பயன்பாடு கால அளவு வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே. ஆனால் அவை மக்குவதற்கு ஆகும் நேரம் பல்லாயிரக்கணக்கான வருடங்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தற்போது உற்பத்தி செய்யப்பட்டும் நெகிழி பொருட்களில் வெறும் 7 % மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுவதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தெருக்களில் கொட்டப்படும் நெகிழிக்குப்பைகளால், கழிவுநீர் மற்றும் வடிகால்வாய்கள் அடைக்கப்பட்டு, மழைக்காலங்களில் சாலைகள் வெள்ளக்காடாக மாறுவதற்கு முக்கிய காரணங்களாக நெகிழிகள் அமைகின்றன. மேலும் நெகிழி குப்பைகளை எரிப்பதால் அதிலிருந்து வெளியாகும் நச்சு வாயுக்கள் புற்றுநோய் உள்ளிட்ட பல வியாதிகளுக்கு காரணமாக இருக்கின்றன. 

இதனையடுத்து, 2018 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதியன்று, 2019ஆம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் 14 வகையான ஒருமுறைப் பயன்படுத்தி தூக்கி எறியும் நெகிழி பொருட்களை உற்பத்தி, சேமிப்பு, போக்குவரத்து விற்பனை மற்றும் விநியோகம் ஆகியவற்றிற்கு தடையை விதிப்பதாக அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழி பொருட்களான நெகிழி கோப்பைகள், குவளைகள், தண்ணீர் பாட்டில்கள் அனைத்து அளவிலான மற்றும் குறைந்த தடிமன் கொண்ட நெகிழி கைப்பைகள், நெகிழி பூசப்பட்ட காகிதத் தட்டுகள், நெகிழி டம்ளர்கள், தெர்மாகோல் கோப்பைகள், தண்ணீர் பைகள்/ பாக்கெட்டுகள், நெகிழி உறிஞ்சு குழல்கள், நெகிழி கொடிகள் போன்றவை தயாரிப்பதும், சேமித்து வைப்பதும், விநியோகம் செய்வதும், உபயோகிப்பதும் தமிழகத்தில் தடை செய்யப்பட்டது .    

எனினும், ஒருசில பகுதிகளில் தடை செய்யப்பட்ட நெகிழி விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதனை கட்டுப்படுத்தும் விதமாக, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்களுக்கு அருகில் குடியிருப்பவர்கள் சட்டவிரோதமாக இயங்கும் தொழிற்சாலைகள் குறித்த தகவலை தெரிவிக்குமாறும் அவர்களுக்கு வெகுமதி வழங்கப்படும் என்றும் சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது.

இந்நிலையில்,நெகிழி தடை தொடர்பாக முக்கிய அரசாணையை தமிழக அரசு இன்று பிறப்பித்துள்ளது. அதில், உற்பத்தி செய்யப்படும் நெகிழிப் பொருட்களில் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிகளில் பங்கு 40 சதவீதம் ஆகும். மிக குறைந்த நேரமே பயன்படுத்தப்படும் இவை, சுற்றுச்சூழலில் ஆயிரமாயிரம் ஆண்டுகள் தேங்கி விடுகின்றன. நெகிழிகளை எரிப்பதன் மூலமும் மாசு ஏற்படுகிறது. நெகிழிகளால் பல்லுயிர்களுக்கு ஏற்படும் இழப்பு மிகப்பெரியது. இறுதியாக கடலுக்கு சென்று கடல்வாழ் உயிரினங்களுக்கும் நெகிழி பாதிப்பை ஏற்படுத்துகிறது. நெகிழி மாசுக்கு எதிராக போராடவும் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழியின் பயன்பாட்டை குறைக்கவும் தமிழக அரசு 4 திட்டங்களை முன்னெடுத்துள்ளது. நெகிழி பயன்பாட்டுக்கு எதிரான மக்கள் இயக்கத்தை ஆதரிக்க வேண்டும். நெகிழி தடையை திறன்பட கண்காணிக்க திட்டத்தை உருவாக்க வேண்டும் . சுற்றுச் சூழலுக்கு ஏற்ற பொருட்களை தயாரிக்க  பொருள்கள் தயாரிப்பாளர்களுடன் ஒருங்கிணைந்த முயற்சி மேற்கொள்ள வேண்டும் போன்ற வழிமுறைகளை அரசு தெரிவித்துள்ளது. இதேபோல், ‘மீண்டும் மஞ்சப்பை’ என்ற பெயரில் விழிப்புணர்வு இயக்கம்  தொடங்க வேண்டும்.  தமிழகத்தின் கலாச்சாரத்தின் ஒன்றிப்போன மஞ்சப்பையை மக்கள் மீண்டும் பயன்படுத்த ஊக்கவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தக சங்கங்கள், குடிமக்கள் அமைப்புகள் உள்ளிட்டவை மூலம் மீண்டும் மஞ்சப்பை இயக்கம் செயல்படுத்தப்படவுள்ளது. என அறிவிக்கப்பட்டுள்ளது.

click me!