வறுமையில் வாடும் தோட்ட தொழிலாளர்கள்; தேயிலைக்கு நியாயமான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை...

First Published Feb 26, 2018, 6:56 AM IST
Highlights
Plantation workers in poverty Request to take action on reasonable prices for tea ...


நீலகிரி

நீலகிரியில் பச்சை தேயிலைக்கு நியாயமான விலை கிடைக்காததால் அதன் தொழிலாளர்கள் வேலை இழந்து வறுமையில் வாடி வருகின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

1899-இல் ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் இந்தியா முழுவதும் தேயிலைத் தொழிற்சாலை தொடங்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை அசாம், மேற்கு வங்காளம், கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பாரம்பரியமாக தேயிலை உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

அதன்படி, நீலகிரி மாவட்டத்தில், தேயிலை விவசாயம் மிக முக்கிய இடத்தை வகிக்கிறது. 1995 - 1999 வரையிலான காலக் கட்டத்தில் பச்சைத் தேயிலை கிலோவுக்கு ரூ.20 வரை விலை போனது. இதனால் தோட்ட நிறுவனங்கள் மற்றும் சிறு தேயிலை விவசாயிகள் பயனடைந்தனர்.

இந்திய தேயிலைக்கு முன்பெல்லாம் வெளிநாடுகளில் மிகுந்த வரவேற்பு இருந்தது. இதன் காரணமாக பச்சைத் தேயிலைக்கு நல்ல விலையும் கிடைத்தது.

நாளடைவில் உலக வர்த்தக கொள்கை தொடங்கியதன் காரணமாக உலக வர்த்தகத்தில் போட்டியிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இந்தியாவை விட மலிவான விலையில் வெளிநாடுகளில் இருந்து தேயிலை இறக்குமதி செய்யப்பட்டதால் தேயிலையின் விலையில் ஏற்ற இறக்கம் ஏற்பட தொடங்கியது.

தற்போது பச்சைத் தேயிலைக்கு கிலோ ரூ.11 மட்டுமே விலை கிடைக்கிறது. இதனால் சிறு விவசாயிகள், சிறு தேயிலை தோட்ட நிர்வாகத்தினர் போதிய வருமானமின்றி பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.

உரம் விலை உயர்வு, தொழிலாளர்கள் கூலி, பராமரிப்பு செலவு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் அன்றாடம் பறிக்கும் பச்சைத் தேயிலையில் இருந்து கட்டுப்படியான விலை கிடைப்பதில்லை. இதனால் தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலையில் சிறு தேயிலைத் தோட்ட நிர்வாகங்கள் திணறுகின்றனர்.

கோடைகாலம் தொடங்கிவிட்டதால் அதுமட்டுமின்றி கூடலூர் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தேயிலை தோட்டங்கள் வறட்சியை சந்தித்து வருகின்றன. இதனால் பச்சை தேயிலை விளைச்சல் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் குறைந்த அளவே பச்சை தேயிலை அறுவடை செய்யப்படுகிறது.

வாரத்தில் ஆறு நாட்கள் பணியாற்றி வந்த தொழிலாளர்களுக்கு வேலை நாட்கள் குறைக்கப்பட்டு வருகிறது. தற்போது மூன்று அல்லது நான்கு நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படுகிறது. மீதமுள்ள நாட்களில் வேலையின்றி வீட்டில் தொழிலாளர்கள் முடங்கி உள்ளனர்.

கூடலூர் பகுதியில் 11 பெரிய கம்பெனி தேயிலை தோட்டங்கள் 35 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இதில் 17 ஆயிரம் ஏக்கர் நிலம் வனமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் சிறு தேயிலை விவசாயிகள், தோட்டங்கள் என 45 ஆயிரத்து 429 உள்ளன. இதில் சுமார் 1 இலட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

பச்சை தேயிலைக்கு போதிய விலை கிடைக்காத காரணத்தால் வாரம் முழுவதும் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் தற்போது குறைந்த நாட்களில் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.

அரசு நிர்ணயித்துள்ள தினக்கூலி ரூ.296 மட்டுமே பெற்று வருகின்ற தொழிலாளர்கள் வாரத்தில் பாதி நாட்களில் வேலை இல்லாமல் இருப்பதால் வறுமையால் கடும் சிரமப்படுகிறார்கள். இதனால் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.

எனவே, பச்சை தேயிலைக்கு நியாயமான விலை கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன.  

 

click me!