அரசு போக்குவரத்து ஊழியர்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்தத்திற்கு தடை கோரி முறையீடு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது
போக்குவரத்து துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புதல், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய அகவிலைப்படி, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், புதிய ஊதிய ஒப்பந்த பேச்சை தொடங்க வேண்டும், கருணை அடிப்படையில் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 9ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக போக்குவரத்து ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால், பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதில் சிக்கல் ஏற்படும். போக்குவரத்து முடங்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, வேலை நிறுத்தத்தில் பங்கேற்காமல் பணிக்கு வர வேண்டும் என ஊழியர்களுக்கு போக்குவரத்துத்துறை உத்தரவிட்டது. ஆனாலும், திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெறும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானம்: ஜன.23இல் முதல்வர் ஸ்டாலின் திறப்பு!
இதையடுத்து போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், கடந்த 5ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், தொழிற்சங்கத்தினரின் கோரிக்கைகள் தொடர்பாக நிதித்துறையிடம் கலந்தாலோசிக்கப்பட வேண்டும். அதன்பிறகு முடிவெடுக்கப்படும் என்றார். மேலும், போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் ஜனவரி 8ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்றும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
இந்த நிலையில், அரசு போக்குவரத்து ஊழியர்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்தத்திற்கு தடை கோரி முறையீடு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில், காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பது சட்டவிரோதம் என தெரிவித்துள்ள மனுதாரர், போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கோரியதுடன், அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் முறையிட்டார். இதையடுத்து, நாளை முதல் வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.