பெரியார் விசிகவுக்கும் வழிகாட்டி; விமர்சிப்பவர்களை வேடிக்கை பார்க்க முடியாது: திருமாவளவன்

Published : Feb 02, 2025, 09:55 PM IST
பெரியார் விசிகவுக்கும் வழிகாட்டி; விமர்சிப்பவர்களை வேடிக்கை பார்க்க முடியாது: திருமாவளவன்

சுருக்கம்

VCK Thirumavalavan on Periyar: பெரியார் விசிகவுக்கும் வழிகாட்டி எனத் திருமாவளவன் கூறினார். அவரை இழிவாகப் பேசுவோரை வேடிக்கை பார்க்க முடியாது என்றும், அம்பேத்கரையும் அந்நியர் என சொல்லக் கூடும் என்றும் எச்சரித்தார். கொள்கை முக்கியம், தேர்தல் வெற்றி இளைப்பாறுதல் மட்டுமே என்றும் அவர் தெரிவித்தார்.

விசிகவுக்கும் பெரியார்தான் வழிகாட்டி என்றும் அவரை விமர்சிப்பவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். பெரியாரைப் பற்றி கொச்சையாகப் பேசக்கூடியவர்கள் தமிழ்நாட்டில் முளைத்துவிட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

திண்டிவனம் அருகே மறைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஒருவரின் படத்திறப்பு விழாவில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "நம்மையெல்லாம் மனிதர்களாகத் தலைநிமிர வைத்த தலைவர்கள் அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் ஆகியோர். விசிக எப்போதும் கொள்கைகளை முதன்மையாகக் கொண்ட இயக்கம். தேர்தல் என்பது இடையில் வந்துபோகிற நிகழ்வு மட்டுமே. எம்.எல்.ஏ., எம்.பி. பதவிகள் எல்லாம் நமது பயணத்தில் ஓர் இளைப்பாறல்தான்" என்று கூறினார்.

மேலும், "இன்று பெரியார் குறித்துக் கொச்சையாக விமர்சனம் செய்யக்கூடியவர்கள் தமிழ்நாட்டில் முளைத்திருக்கிறார்கள். அவர்களைப் பின் இருந்து இயக்கக்கூடியவர்கள் யார் என்பதும் அவர்கள் மூலமே அம்பலமாகிவிட்டது. பெரியார் இயக்கம் தொடங்கிய காலத்தில் இருந்து அவரை வீழ்த்த முயற்சித்தவர்கள் யார் என்பதை நாடு அறியும், நாமும் அறிவோம். அந்த கும்பல் ஒவ்வொரு முறையும் தோற்றுப்போய் வீழ்ந்தார்களே தவிர, பெரியாரை வீழ்த்த முடியவில்லை" என்றார்.

தி.மு.க., அ.தி.மு.க. போன்ற கட்சிகளுக்கு மட்டுமே பெரியார் வழிகாட்டி அல்ல. வி.சி.க.வுக்கும் அவர்தான் வழிகாட்டி என்ற திருமாவளவன், பெரியாரை விமர்சிப்பவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது எனவும் உறுதிபடத் தெரிவித்தார்.

"பெரியாரை அந்நியர் என்று சொல்பவர்கள், அம்பேத்கரை அப்படிச் சொல்வதற்கு எவ்வளவு நேரம் ஆகும். பெரியார் தமிழர் அல்ல; தமிழ் தேசியத்தின் பகைவர் என்று உளறிக்கொண்டிருக்கிறார்கள். இதை அனுமதித்தால், அம்பேத்கரை மராட்டியர் என்று சொல்லி அந்நியப்படுத்துவார்கள். அவருக்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பார்கள்" என்று திருமாவளவன் பேசினார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இலங்கைக்கு உதவிய தமிழகம்: புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 950 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு
இப்படியொரு ப்ளானா..? டபுள் ஸ்டாண்ட் விஜயின்..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!