
பேரறிவாளனுக்கு தமிழக அரசு வழங்கிய பரோலை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று வேலூர் ஆட்சியர் ராமனிடம், காங்கிரசு சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லம்பாஷா தலைமையில் மனு அளிக்கப்பட்டது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த கடந்த 24–ஆம் தேதி அவருக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. பரோலில் வெளியே வந்த அவர் ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் தங்கியுள்ளார்.
தமிழக அரசு, பேரறிவாளனுக்கு பரோ வழங்கப்பட்டதில் இருந்தே, காங்கிரசு கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. பரோலை உடனடியாக திரும்ப பெறவும் வலியுறுத்தியது.
மேலும், பேரறிவாளன் வீட்டை நேற்று முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப் போவதாகவும் காங்கிரசு சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் அஸ்லம்பாஷா அறிவித்திருந்தார்.
அத்துடன், இது தொடர்பாக ஆர்ப்பாட்டமும் நடத்த காவலாளர்களிடம் அவர்கள் அனுமதி கேட்டனர். ஆனால், காவலாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி அளிக்கவில்லை. அதனால், பேரறிவாளன் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தை காங்கிரசு கட்சியினர் ரத்து செய்தனர்.
இதனையடுத்து, வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், காங்கிரசு சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லம்பாஷா தனது ஆதரவாளர்களுடன் வந்து ஆட்சியர் ராமனிடம் மனு ஒன்றை அளித்தார்.
பின்னர், மனுகுறித்து செய்தியாளர்களிடம் கூறியது:
“பேரறிவாளனை, தமிழக அரசு ஒரு மாத பரோலில் விடுவித்துள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தமிழக அரசு இந்த உத்தரவு வழங்கியது மக்களை திசை திருப்பும் செயலாகும்.
அதிமுக-விற்குள் தற்போது கோஷ்டி பூசல் நிலவுகிறது. தங்கள் ஊழலை மறைக்க பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தால் ஏற்றுக் கொள்வோம்.
தமிழக அரசு பரோல் வழங்கியதில் அரசியல் உள் நோக்கம் இருப்பதாக தெரிகிறது. இதன் பின்னணியில் பாரதீய ஜனதா கட்சியினரும், மோடியும் இருப்பதாக மக்கள் நினைக்கின்றனர்.
எனவே, பேரறிவாளனுக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு மாத பரோலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்” என்று அவர் கூறினார்.