ஆளும் கட்சியில் நிலவும் குழப்பத்தினால் தமிழகத்தில் பல்வேறு துறைகள் முடங்கி கிடக்கின்றன – ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு…

First Published Aug 29, 2017, 7:53 AM IST
Highlights
Various fields are stuck in TN due to confusion of ruling party - GK Vasan


திருவண்ணாமலை

ஆளும் கட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பத்தினால் தமிழகத்தில் பல்வேறு துறைகள் செயல்படாமல் முடங்கி கிடக்கின்றன என்று ஜி.கே.வாசன் குற்றம் சாட்டினார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழ் மாநில காங்கிரசு தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வந்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அதில், “தமிழகத்தில் ஆளும் ஆட்சியாளர்கள் மற்றும் அவர்களைச் சேர்ந்த ஆளும் கட்சியினரிடையே பல பிரச்சனைகள், குழப்பங்கள், கருத்து வேறுபாடுகள் நிலவி வருகிறது. ஆட்சியில் நிலையற்ற தன்மை உள்ளதால், இந்தக் குழப்பத்திற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்.

தமிழக ஆளுநர் இதுகுறித்து காலம் தாழ்த்தாமல் உண்மை நிலைக்கு ஏற்றவாறு முடிவுகள் எடுக்க வேண்டும்.

ஆளும் கட்சியில் ஏற்பட்டுள்ள இந்தக் குழப்பத்தினால் தமிழகத்தில் பல்வேறு துறைகள் செயல்படாமல் முடங்கி கிடக்கிறது. இந்த நிலை நீடித்தால் தமிழகத்தின் வளர்ச்சியும், மக்களின் வளர்ச்சியும் பாதிப்படையும்.

தமிழகத்தில் நிர்வாகம் முடங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது ஆளுநரின் பொறுப்பு மற்றும் கடமை.

ரேசன் கடைகளில் மக்களுக்கு அளிக்கப்படும் பொருட்கள் ஏழை, எளிய மற்றும் அடிதட்டு மக்களுக்கு மிக முக்கிய தேவை. இதனை நிறுத்தக் கூடிய எந்த நிலையையும் மத்திய அரசு எடுக்கக் கூடாது. ரே‌சன் கடைகளில் அளிக்கப்பட்டு வரும் அத்தியாவசிய பொருட்கள் வழங்குவது தொடர வேண்டும்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தனித்தன்மையோடு செயல்படுகிறது. உள்ளாட்சி தேர்தல் சமயத்தில் மக்களின் நிலைபாடு மற்றும் தொண்டர்களின் கருத்துக்கு ஏற்றவாறு கூட்டணி முடிவு செய்யப்படும்.

தமிழகத்தில் எதிர்க்கட்சியான திமுக தனது கடமையைத் தொடர்ந்து செய்து வருகிறது. அதிமுகவில் குழப்பங்கள் அனைத்தையும் அவர்களாக தீர்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், மற்றவர்கள் அதை பயன்படுத்தி கொள்வார்கள்.

தமிழகத்தில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. அதற்கு முன்னெச்சரிக்கையாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. கிராமம் தோறும் மருத்துவக் குழுக்கள் அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

click me!