
கோவை,
அன்னூரில் ஏராளமான ஈக்களின் தொல்லைக்கு ஆளான மக்கள் தங்கள் ஊரைவிட்டு, பக்கத்து ஊருக்குச் சென்று உணவு சாப்பிட்டு திரும்புகின்றனர்.
அன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது கஞ்சப்பள்ளி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சப்பள்ளி, நீலகவுண்டன்புதூர், தாசபாளையம், அல்லபாளையம், உருத்திரியாபாளையம், நரியம்பள்ளி, செங்காளிபாளையம் உள்பட பல்வேறு கிராமங்கள் இருக்கின்றன.
இந்த பகுதியில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள மக்கள் அனைவருமே விவசாயத்தையே பிரதான தொழிலாக வைத்துள்ளனர்.
இந்தப் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முட்டை கோழி வளர்க்கும் பண்ணைகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன. அந்த பண்ணைகளில் சேரும் கழிவுகளை சரியாக அவர்கள் கையாளாததால் அங்கு ஈக்கள் அதிகரிக்கத் தொடங்கின.
பகல் நேரத்தில் சுதந்திரமாகச் சுற்றித் திரியும் ஈக்கள் அந்தப் பகுதியைச் சேர்ந்த அனைத்து வீடுகளுக்குள்ளும் படையெடுக்கிறது. இதனால் அவர்கள் சரியாக சாப்பிட முடியாமல் அவதியுற்றனர். அத்துடன் வீடுகளின் கதவுகள், ஜன்னல் களை பூட்டி வைத்தாலும், வெளியே மொய்த்துக்கொண்டு இருக்கும் ஈக்கள், யாராவது கதவை திறந்து உள்ளே செல்லும்போது அனைத்தும் வீட்டுக்குள் புகுந்து விடுகின்றன.
சாப்பிடும்போது தொல்லை தரும் ஈக்களை விரட்ட ஒரு கைகள் போதவில்லை என்பதால், அங்கு யாரும் பகல் நேரத்தில் சாப்பிடுவதும் இல்லை. இரவு நேரத்தில்தான் சாப்பிடுகின்றனர். அதுபோன்று அங்கு வளர்க்கப்பட்டு வரும் கால்நடைகள்கூட ஈக்கள் தொல்லையால் மிகவும் சிரமப்பட்டு வருகிறது.
“எங்கள் கிராமத்தை சுற்றிலும் ஏராளமான முட்டைக் கோழி பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகளில் ஏராளமான முட்டைக் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அங்கு சேரும் கழிவுகளை உடனுக்குடன் சுத்தம் செய்துவிட்டால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை. ஆனால் அவ்வாறு செய்யாததால் அந்த கழிவுகளில் இருந்து தினமும் ஏராளமான ஈக்கள் பரவுகிறது.
அவ்வாறு பரவும் ஈக்கள் எங்கள் கிராமத்துக்குள் புகுந்து மக்களை பாடாய் படுத்தி வருகிறது. இதனால் நாங்கள் ஒருங்காக சாப்பிடக்கூட முடியவில்லை. சாப்பிடுவதற்கு தட்டில் சாப்பாடு போட்டு மேஜையில் வைத்தால் அதற்குள் ஏராளமான ஈக்கள் வந்து மொய்த்து விடுகிறது. அதை பார்க்கும்போதே வாந்திதான் வருகிறது. வீட்டுக்குள் குடும்பத்துடன் அனைவரும் அமர்ந்து வயிறு நிறைய சாப்பிட்டு பல நாள்கள் ஆகிறது.
அதுபோன்று பிறந்த குழந்தைகளை இந்த ஈக்கள் சரியாக தூங்கக்கூட விடுவது இல்லை. பெரும்பாலும் குழந்தைகள் பிறந்ததும் பகலில்தான் தூங்கும். ஆனால் இந்த ஈக்கள் அந்த குழந்தைகளை தூங்க விடாமல் ரிங்காரமிட்டு சுற்றிச் சுற்றி வந்து குழந்தைகள் மீது அமர்கிறது. இதனால் அந்த குழந்தைகள் தூங்காமல் முழித்து அழுது கொண்டே இருக்கிறது.
இதனால் இந்த பகுதியை சேர்ந்தவர்கள் யாருக்காவது குழந்தை பிறந்தால் உடனே அவர்கள் வெளியூர்களில் உள்ள தங்களின் உறவினர்கள் வீட்டிற்கு சென்று விடுகிறார்கள். இந்த தொல்லையில் இருந்து எங்களை காப்பாற்ற வேண்டும் என்று ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்தோம். அதன் விளைவாக அதிகாரிகள் எங்கள் பகுதிக்கு வந்து மருந்து அடித்தார்கள்.
அந்த மருந்தால் ஈக்கள் சாகவில்லை. ஆனால் எங்கள் பகுதியை சேர்ந்த சிறுவர்கள் மற்றும் முதியவர்களுக்கு வயிற்றுப்போக்குதான் ஏற்பட்டது. கடைகளில் விற்பனை செய்யப்படும் அனைத்து பொருட்களிலும் ஈக்கள்தான் ஆதிக்கம் செலுத்துகிறது. எங்கள் ஊரில் ஈக்கள் இல்லாத இடமே இல்லை என்றே கூறலாம்.
வீட்டை பூட்டிவிட்டு உள்ளே அமர்ந்து அனைவரும் சாப்பிடலாம் என்று நினைத்தால், எப்படியாவது அந்த ஈக்கள் உள்ளே புகுந்து விடுகிறது. இதனால் அனைவரும் சாப்பிட வெளியூர் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் மழைக்காலம் தொடங்க உள்ளது. மழைக்காலம் தொடங்கிவிட்டால் ஈக்களால் அதிகளவில் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதற்கு முன்பு இந்த ஈக்களை கட்டுப்படுத்த வேண்டும்” என்று இவ்வூரைச் சேர்ந்த பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:
“கஞ்சப்பள்ளி மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் சப்போட்டா, கொய்யா ஆகியவைதான் அதிக ளவில் சாகுபடி செய்யப்பட்டு உள்ளன. இந்த ஈக்கள் இந்த மரத்தில் உள்ள பூக்களில் அமருவதால் அவைகள் உடனடியாக காய்ந்து கீழே விழுந்துவிடுகிறது. இதனால் சப்போட்டா, கொய்யா மரத்தில் காய்கள் பிடிப்பது இல்லை.
அதுபோன்று நாங்கள் ஏராளமான ஆடு மற்றும் மாடுகளை வளர்த்து வருகிறோம். அந்த கால்நடை களையும் ஈக்கள் விட்டு வைப்பது இல்லை. அவற்றின் மீது ஈக்கள் கூட்டங்கூட்டமாக மொய்ப்பதால் சில நேரங்களில் கால்நடைகள் சத்தம்போடுகிறது. அதை பார்க்கும்போது பாவமாக இருக்கிறது. முட்டை கோழி பண்ணை வைத்து உள்ளவர்கள் சார்பில் ஈக்களை கட்டுப்படுத்த எங்களுக்கு ஒரு மருந்து கொடுத்து உள்ளனர். அந்த மருந்தை தெளித்தால் ஈக்கள் சாவது இல்லை.
மேலும் இந்தப்பகுதியில் ஒருசில விவசாயிகள் கோழிப்பண்ணை வைத்து உள்ளனர். ஈக்கள் தொல்லை காரணமாக கோழிப்பண்ணையில் வளரும் கோழிகளும் சரியாக வளருவது இல்லை. இதனால் பலர் கோழிப்பண்ணையை விட்டுவிட்டனர்.
எங்கள் பகுதியில் புகழ்வாய்ந்த தேனீஸ்வரன் கோவில், பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. ஈக்கள் தொல்லை காரணமாக இந்த கோவில்களில் சரியாக பூஜைகளும் செய்யப்படுவது இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து, எங்கள் பகுதியில் தொல்லை கொடுக்கும் ஈக்களை உடனடியாக அழிக்க வழிவகை செய்ய வேண்டும்” என்று அவர்கள் தெரிவித்தனர்.