
இராமநாதபுரம்
பிளாஸ்டிக் பொருட்களை விட்டுட்டு மீண்டும் பனையோலை பொருட்களின் மீது மக்கள் ஆர்வம் காட்டுவதால் பனை ஓலைக்கு மௌசு கூடியுள்ளது. அதேசமயம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
காகிதங்கள் தோன்றும் முன்னே நம் முன்னோர்கள் பனை ஓலைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட ஏடுகளின் மூலம் தங்களின் அறிவுத் திறனை அபாரமாக வளர்த்துக் கொண்டனர். இதனால் ஏடுகளே அறிவின் சின்னமாக கருதப்பட்டு வருகிறது.
குறிப்பாக கூந்தபனைமரம், தாழிப்பனை மரம் போன்றவற்றின் ஓலைகளில்தான் ஏடுகள் தயாரிக்கப்பட்டன.
இப்போது மஞ்சள் கயிற்றில் தாலி, தங்கத்தில் தாலி அணிவது போல, பழந்தமிழர்கள் பனை ஓலையில் மணமகன் பெயரையும், மணமகள் பெயரையும் எழுதி சுருட்டி மணமகளின் காதில் அணிவர். அந்தக் காலத்தில் அதுதான் தாலியாக கருதப்பட்டது. இவ்வாறு அன்று முதல் இன்று வரை பனை ஓலை மனிதர்களின் வாழ்வில் கலந்து வருகிறது.
மனிதர்களின் பயன்பாட்டில் மிக முக்கிய பொருளாக கருதப்பட்ட பனை ஓலை பொருட்கள் பிளாஸ்டிக்கின் வரவால் மெல்ல மெல்ல அழிந்து விட்டது.
மேலும், விவசாய நிலங்கள் எல்லாம் விலை நிலங்களாக மாறிவிட்டதாலும், பனை மரங்கள் செங்கல் சூளைகளுக்கும் இன்னும் பிற காரணங்களுக்காகவும் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்ற காரணமாக பனை மரங்கள் 70 சதவீதம் அளவிற்கு அழிந்து விட்டன.
பல்கி பெருகி ஓங்கி வளர்ந்திருந்த பனை மரங்கள் இன்று அரிதாக அங்கொன்றும் இங்கொன்றுமாக காணப்பட்டு வருகின்றன.
நாகரிக வளர்ச்சியால் ஈர்க்கப்பட்ட மக்கள் தற்போது மீண்டும் பண்டைய நாகரிக பயன்பாட்டிற்கு வரத் தொடங்கியுள்ளனர்.
பிளாஸ்டிக் பயன்பாட்டில் இருந்து விலகி தற்போது மீண்டும் பனை ஓலை பொருட்கள் மற்றும் அதன் நன்மையின் மேல் அக்கறை கொண்டு அதனை நாடிச் செல்கின்றனர்.
தற்போது பனை ஓலையினால் செய்யப்படும் பொருட்களுக்கு மௌசு கூடியுள்ளது. இதுதவிர, என்னதான் மின்சாரக்காற்று இருந்தாலும் அது வெப்பக்காற்காக இருப்பதால் பனை ஓலையினால் செய்யப்பட்ட விசிறிகளை தற்போது அதிக அளவில் வாங்கி வருகின்றனர். இதனால் இந்த விசிறிகளுக்கும் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
பனை ஓலை பொருட்களின் மேல் மனிதனுக்கு ஆர்வம் அதிகரித்துள்ள நிலையில் அதற்கான பனை ஓலைகள் கிடைப்பதில்லை என்பதுதான் வேதனையானது.
இதற்கு காரணம் மரங்களை எல்லாம் விலைக்காக விற்பனை செய்துவிட்டதால் ஒரு சிலமரங்களே மிஞ்சி உள்ளன. இந்த மரங்களில் வளர்ந்துள்ள பனை ஓலைகளை வெட்டி வந்து உரிய முறையில் தயார் செய்து பனை ஓலை பொருட்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
இராமநாதபுரம் மாவட்டம் இயற்கையிலேயே பனை மரங்கள் அதிகம் உள்ள பகுதியாக இருப்பதால் இங்கு மிஞ்சியுள்ள பனை மரங்களில் இருந்து பனை ஓலைகள் வெட்டி கொண்டுவரப்பட்டு பனை ஓலைகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
குறிப்பாக ரெகுநாதபுரம், பெரியபட்டிணம், நைனாமரைக்கான், பத்திராதரவை உள்ளிட்ட பகுதிகளில் இந்த பனை ஓலைகள் விற்பனை அதிகஅளவில் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து பனை ஓலை வியாபாரிகள் கூறியது:
வெயிலின் காரணமாக விசிறி விற்பனை அதிகரித்து உள்ளதாலும், பனை ஓலை பொருட்கள் மீது மக்களுக்கு நாட்டம் அதிகரித்து உள்ளதாலும் பனை ஓலைகள் விற்பனை அதிகரித்து வருகிறது. ஆனால், விற்பனைக்கு தேவையான பனை ஓலைகள் கிடைப்பதில்லை.
இதுதவிர, ஒரு பனை மரத்தில் ஏறி ஓலைகளை வெட்டி தருவதற்கான கூலியும் அதிகரித்து விட்டது. இருந்தாலும், எங்களின் தொழிலை கைவிட்டுவிடக் கூடாது என்பதற்காக பனை ஓலைகளை வெட்டி வந்து காயவைத்து பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்து வருகிறோம்.
இந்த தொழில் முழுமையாக நசிந்துவிடாமல் தடுக்கவும், பனை மரங்களினால் மனிதனுக்கு கிடைக்கும் பொருட்களை பெறவும் பனை மரங்களை வெட்டுவதற்கு தடைவிதிக்க வேண்டும். அப்போதுதான் கற்பகத்தருவை காப்பாற்ற முடியும்” என்று அவர்கள் கூறினர்.