
ஆண்டுதோறும் திருவாரூர் தியாகராஜர் கோயிலில் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழாவுக்குப் பின் ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இந்தாண்டுக்கான திருவிழா இன்று காலை தொடங்கியது. காலை 7.30 மணிக்கு திருவாரூர் சன்னதி தெரு எதிரே அமைந்துள்ள தேரடியிலிருந்து ஆழித்தேரோட்டம் தொடங்கியது.
96 அடி உயரமும், 31 அடி அகலமும், 350 டன் எடையும் கொண்ட ஆழித்தேரை அமைச்சர் காமராஜ், மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ், தேரை வடம் பிடித்து துவக்கி வைத்தனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆருரா, தியாகேசா என்று பக்தி முழக்கங்களை எழுப்பி ஆழித்தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
தெற்குவீதி, மேற்குவீதி, வடக்கு வீதி, கீழவீதிகளில் வந்த ஆழித்தேரை பக்தர்கள் மெய்சிலிர்க்கத் தரிசனம் செய்தனர். ஆழித்தேர் திருவிழாவில் பங்கேற்பதற்காக 50 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் திருவாரூரில் குவிந்துள்ளதால், பாதுகாப்பு பணியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முக்கிய பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்பட்டு கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.