
அரியலூர்
மனு கொடுக்க சென்ற மக்கள் நீண்ட நேரம் காத்திருந்தும் அவற்றை பெற்றுக் கொள்ள அதிகாரிகள் வராததால் பொறுமை இழந்த மக்கள் செயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அரியலூர் மாவட்டம், செயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், செயங்கொண்டம் ஒன்றிய பகுதி மக்கள் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.
செயங்கொண்டம் காந்தி பூங்காவிலிருந்து ஒன்றிய அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்த இவர்களுக்கு மாவட்டக் குழு உறுப்பினர் உத்திராபதி தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் பிச்சைபிள்ளை, ஒன்றியத் தலைவர் சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், மகாராசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மணிவேல், மாநில குழு உறுப்பினர் சின்னதுரை ஆகியோர் பேசினர்.
இந்தப் போராட்டத்தில் செயங்கொண்டம், ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 100 நாள் வேலை திட்டத்தில் மக்களுக்கு முறையாக வேலை வழங்கவில்லை.
நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை செய்தவர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படவில்லை.
நூறு நாள் வேலை திட்டத்தினை மாற்றி 200 நாட்கள் பணி வழங்க வேண்டும்" உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு முழக்கங்களும் எழுப்பப்பட்டன.
இந்த நிலையில் நீண்ட நேரமாகியும் அதிகாரிகள் யாரும் வராததால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த செயங்கொண்டம் காவல் ஆய்வாளர் வேலுசாமி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து மக்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) குருநாதனிடம், மனு அளித்துவிட்டு அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.