
கடந்த 8ம் தேதி இரவு பிரதமர் மோடி, 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். கையில் இருப்பு உள்ள பணத்தை, அனைத்து வங்கிகளிலும் செலுத்தி ரூ.4,500 வரை பெற்று கொள்ளலாம் என கூறினார். இதையடுத்து கடந்த ஒரு வாரமாக பொதுமக்கள், வங்கிகளின் வாசலில் பணத்தை மாற்றுவதற்காக காத்துக் கிடக்கின்றனர்.
இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவையை கூட பூர்த்தி செய்ய முடியாமல் தவிக்கின்றனர். இதையடுத்து 500, 1,000 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் வங்கிகளில் கொடுத்து மாற்றி வருகிறார்கள். இப்படி பணத்தை மாற்றினாலும், புதிய ரூ.2,000 நோட்டுகள், ரூ.100, ரூ.50, ரூ.20, ரூ.10 மற்றும் 10, 5 ரூபாய் நாணயங்கள் வழங்கப்படுகின்றன.
இதையொட்டி, சென்னை ரிசர்வ் வங்கியில் இருந்து தமிழக அரசு தலைமை செயலகம் வரை பொதுமக்கள் நீண்ட வரிசையில் பணம் மாற்றுவதற்காக மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றனர்.
சென்னை ராஜாஜி சாலை, அண்ண சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தபால் நிலையங்களில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு வழக்கம்போல் கூட்டம் அதிகளவில் செல்கிறது.
இன்னும் சில நாட்களில் புதிய 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்துவிடும், அதன் பின்னர், அனைத்து ஏ.டி.எம். மையங்களிலும் பணம் நிரப்பப்படும்.
அதற்கு பின்னர் தற்போதைய காணப்படும் சூழலில் மாற்றம் ஏற்பட்டு இயல்பு நிலை திரும்பும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.