
நாமக்கல்
நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் ரூ. 13.80 கோடி அளவில் 2330 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. அதேபோன்று இராசிபுரத்திலும் ரூ. 3.29 கோடி மதிப்பில் வழக்குகள் தீர்க்கப்பட்டன.
நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் தேக்கத்தைக் குறைக்க, தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் மாதந்தோறும் மக்கள் நீதிமன்றம் நடத்தப்படுகிறது.
அதன்படி, மாவட்ட முதன்மை நீதிபதி கே.எச்.இளவழகன் உத்தரவின்பேரில், இந்த மாதத்திற்கான மக்கள் நீதிமன்றம் நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடைப்பெற்றது.
இந்த மக்கள் நீதிமன்றத்திற்கு மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி கே.இளங்கோ தலைமைத் தாங்கினார். சார்பு நீதிபதிகள் எஸ்.அசீன்பானு, என்.பாரி, மாவட்ட கூடுதல் உரிமையியல் நீதிபதி ஞான பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிலுவையில் உள்ள உரிமையியல், குற்றவியல், ஜீவனாம்சம், வங்கி கடன், மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு உள்ளிட்ட 7000 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் 2330 வழக்குகள் சமரச தீர்வு காணப்பட்டு ரூ.13.80 கோடி அளவிற்கு தீர்வு செய்யப்பட்டன.
அதேபோன்று, நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் நீதிமன்ற வளாகத்தில் வட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில், தேசிய மக்கள் நீதிமன்றம் நடைப்பெற்றது.
இதற்கு இராசிபுரம் சார்பு நீதிபதி பிரபாசந்திரன் தலைமைத் தாங்கினார். இந்நீதிமன்ற விசாரணையில் உரிமையியல் வழக்குகள், விபத்து நஷ்ட ஈடு வழக்குகள் போன்றவை விசாரித்து உடனடி தீர்வு காணப்பட்டது.
இதில் ரூ. 3.29 கோடி மதிப்பில் 108 மோட்டார் விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள் விசாரிக்கப்பட்டன.