
நாகப்பட்டினம்
ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய 21 மாத நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர்கள் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர்கள் சங்க முன்னணி உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் நாகப்பட்டினம் மாவட்டம், நீடாமங்கலத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த முகாமிற்கு மாவட்டத் தலைவர் டி.சீனிவாசன் தலைமைத் தாங்கினார். மாநிலச் செயலாளர் குரு.சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் ஏ.பெத்தபெருமாள் வரவேற்றுப் பேசினார்.
இதில், அமைப்பு ஸ்தாபனம் பற்றி என்.எல். சீதரன், ஓய்வூதிய விதிகள் பற்றி மாநில துணைத் தலைவர் எஸ். சந்திரன், பிரச்னைகளும் தீர்வும் என்ற தலைப்பில் மாநிலத் துணைத் தலைவர் டி. கணேசன் ஆகியோர் பயிற்சியளித்தனர்.
பின்னர், "ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய 21 மாத நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும்.
கிராம ஊழியர், சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் ரூ. 7850 வழங்க வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த முகாவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த முகாமில் திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர்,திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சங்க முன்னணி உறுப்பினர்கள் பலரும் பயிற்சியில் பங்கேற்றனர்.
முகாமின் இறுதியில் நாகப்பட்டின மாவட்டச் செயலாளர் சொ. கிருஷ்ணமூர்த்தி நன்றித் தெரிவித்தார்.