
திருச்சி
மணப்பாறை அருகே ஒரு மாதத்திற்கும் மேலாக குடிநீர் விநியோகம் இல்லாததால் சினம் கொண்ட மக்கள் வெற்றுக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த எப்.கீழையூர் ஊராட்சிக்கு உட்பட்டது மேட்டுக்கடை. இந்தப் பகுதியில் ஒரு மாதத்திற்கும் மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் மக்கள் குடிக்க தண்ணீரின்றி மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
மேலும், ஆழ்குழாய் கிணறுகளிலும் தண்ணீர் இல்லாத நிலையில் அவதிப்பட்டு வரும் மக்கள் தண்ணீரைத் தேடி காலை முதல் இரவு அலைவதே சூழ்நிலையாகிவிட்டது.
இதுதொடர்பாக பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும், மனுக்களாக கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் சினம் கொண்ட மக்கள் நேற்று காலை மணப்பாறை - கோவில்பட்டி சாலையில் மேட்டுக்கடை என்ற இடத்தில் வெற்றுக் குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த அதே பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க நிர்வாகி வடிவேல், அழகர்சாமி ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் கிடைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை அடுத்து மக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.