திருட்டுத்தனமாக மணல் அள்ளிய அரசியல் பிரமுகரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்; 3 மணிநேரம் முடங்கிய போக்குவரத்து...

First Published Jun 25, 2018, 9:59 AM IST
Highlights
people held in road block protest against smuggling sand


நாகப்பட்டினம்
 
நாகப்பட்டினத்தில் உள்ள ஆறுகளில் இருந்து திருட்டுத்தனமாக மணல் அள்ளிய அரசியல் பிரமுகரைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மூன்று மணிநேரம் நடந்த இந்தப் போராட்டத்தால் போக்குவரத்து முடங்கியது.

நாகப்பட்டினம் மாவட்டம், திருமருகல் ஒன்றிய பகுதிகளில் முடிகொண்டான் ஆறு, அரசலாறு, திருமலைராஜன் ஆறு ஆகிய ஆறுகள் உள்ளன. இந்த ஆறுகளில் சிலர் அனுமதியின்றி மணல் திருடுவதாக சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு பொதுமக்கள் பலமுறை புகார்கள் கொடுத்துள்ளனர். 

இதற்கு வருவாய் துறை, கனிமவளத்துறை, காவல் துறை சார்பில் இந்த ஆறுகளை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

எனினும், அதிகாரிகளையும் மீறி பல்வேறு இடங்களில் திருட்டுத்தனமாக மணல் அள்ளப்படுவது நடந்து கொண்டுதான் இருக்கிறது என்பதால் இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதேபோன்றும், சேசமூலை பகுதியில் தொடர்ந்து திருட்டுத்தனமாக மணல் அள்ளப்படுகிறது என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடந்த மே மாதம் 25-ஆம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், உதவி ஆட்சியர், தாசில்தார் ஆகியோரிடம் மனு கொடுத்தனர். 

இதனையடுத்து அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், சேசமூலை பகுதியில் தொடர்ந்து மணல் அள்ளப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் திருட்டுத்தனமாக மணல் அள்ளியதைக் கண்டித்து நேற்று அம்பேத்கர்நகர் பொதுமக்கள் சேசமூலை, பூந்தோட்டம் - காரைக்கால் சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் காவல் ஆய்வாளர் குலோத்துங்கன், திட்டச்சேரி காவல் உதவி ஆய்வாளர் ஜெயந்திரசரஸ்வதி, கிராம நிர்வாக அலுவலர் சதீஸ் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அப்போது, "தொடர்ந்து திருட்டுத்தனமாக மணல் அள்ளுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் அள்ளுபவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகளை பொதுமக்கள் வலியுறுத்தினர்.

அதற்கு அதிகாரிகள், "அனுமதியின்றி மணல் அள்ளுபவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உறுதியளித்தனர். 

இதில் உடன்பாடு ஏற்பட்ட பிறகே பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் அந்த பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  

click me!