
மதுரை
தூய்மை நகரங்களுக்கான பட்டியலில் மதுரை மாவட்டம் 123–வது இடத்தை பிடித்துள்ளது. வருடா வருடம் பட்டியலில் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது தூங்கா நகரம்.
மத்திய அரசு "ஸ்வச் சுராக்ஷன்" திட்டத்தின் கீழ் வருடந்தோறும் தூய்மை நகரங்களுக்கான பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி, இந்த வருடம் 1 இலட்சத்திற்கும் அதிகமான மற்றும் குறைவான மக்கள் தொகை என்று பிரித்து மொத்தம் 4023 நகரங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
அதன் முடிவுகளை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. இந்தப் பட்டியலில் மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் மாநகராட்சி முதல் இடத்தையும், போபால் 2–வது இடத்தையும், சண்டிகர் 3–வது இடத்தையும் பிடித்துள்ளது. மேற்கு வங்காளத்தில் உள்ன பத்ரஸ்வரர் மாநகராட்சி கடைசி இடத்தை பிடித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள நகரங்களை பொறுத்தவரை இந்தப் பட்டியலில் திருச்சி 13–வது இடத்தை, கோவை 16–வது இடத்தையும், ஈரோடு–51, சென்னை–100, மதுரை–123, திண்டுக்கல்–124, புதுக்கோட்டை–167,
தூத்துக்குடி–171, திருப்பூர்–172, நெல்லை–175, காரைக்குடி–196, கும்பகோணம்–200, பல்லாவரம்–238, சேலம்–244, திருவண்ணாமலை–247, ஆம்பூர்–258, ஒசூர்–264, வேலூர்–285, ராஜாபாளையம்–288, காஞ்சிபுரம் 297–வது இடத்தையும் பிடித்துள்ளன.
மதுரை மாநகராட்சியை பொறுத்தவரை கடந்த 2016–ஆம் ஆண்டு 26–வது இடத்திலும், 2017–ஆம் ஆண்டு 57–வது இடத்திலும், இந்தாண்டு 123–வது இடத்திலும் தொடர்ந்து பின்னோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.