கூச்சலிட்ட மக்கள், வங்கியை உள்பக்கமாக பூட்டிய வங்கி மேலாளர்…

First Published Dec 16, 2016, 10:26 AM IST
Highlights


களியக்காவிளை அருகே வங்கியில் குறைவான அளவில் தொகை வழங்குவதாக அறிவித்ததால், மக்கள் கூச்சலிட்டனர். இதனால், வங்கி மேலாளர், வங்கியை உள்பக்கமாக பூட்டிவிட்டு உள்ளே இருந்தார். கோவமடைந்த வாடிக்கையாளர்கள் வங்கி முன் அமர்ந்து முற்றுகையிட்டனர்.

களியக்காவிளை அருகேயுள்ள செம்மான்விளை பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் நாள்தோறும் சுமார் 400 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டு பணம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வியாழக்கிழமை பணம் பெறுவதற்காக வரிசையில் நின்ற வாடிக்கையாளர்களிடம் வங்கியில் கையிருப்பு குறைவாக உள்ளதால் நபர் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வீதம் வழங்கப்படும் என வங்கி மேலாளர் தெரிவித்துள்ளார். இதற்கு வாடிக்கையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர்.

இதனையடுத்து வங்கியை உள்பக்கமாக பூட்டிவிட்டு அதன் மேலாளர் வங்கிக்குள் இருந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் வங்கி முன் அமர்ந்து முழக்கமிட்டனர்.

தொடர்ந்து வங்கி மேலாளர் வங்கியின் உயர் அதிகாரிகளுக்கும், நித்திரவிளை காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தார்.

இதனையடுத்து அங்கு வந்த காவலாளர்கள் வாடிக்கையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வங்கிக்கு மேலும் ரூ.8 இலட்சம் கொண்டுவரப்பட்டது.

பின்னர், வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சமாக ரூ.6 ஆயிரம் வரை வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து முற்பகல் 11.30 மணிக்கு வங்கி திறக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு பணம் வழங்கப்பட்டது.

இதனால், அந்த பகுதி சிறிதுநேரம் பரபரப்புடன் காணப்பட்டது.

click me!